Posted in

படிக்காத முதிர்ச்சியற்ற பேச்சு.. விஜய்யின் பெயரை எழுதுவதே ஒரு ‘வரலாற்று அசிங்கம்’;வெடித்த புதிய சர்ச்சை!

தமிழக சட்டமன்றத் தேர்தலுக்குப் பிந்தைய அரசியல் களம் நாளுக்கு நாள் பல்வேறு அதிரடித் திருப்பங்களுடன் நகர்ந்து வரும் வேளையில், தற்போதைய ஆளும் தவெக மற்றும் பிரதான எதிர்க்கட்சியான அதிமுக இடையே புதிய வார்த்தை மோதல் வெடித்துள்ளது. அண்மையில் நடைபெற்ற திருச்சி பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் விஜய் பேசுகையில், “தமிழகத்தில் திமுகவுக்கும் தவெகவுக்கும்தான் போட்டி, மற்றவர்கள் எல்லாம் அள்ளு சில்லுகள்” என்றும், “அதிமுக ஒரு தீந்துபோன சக்தி” என்றும் விமர்சித்திருந்தார். இந்த நிலையில், விஜய்யின் இந்த விமர்சனத்திற்கு அதிமுக அதிகாரப்பூர்வமாகத் தனது எக்ஸ் (X) பக்கத்தில் மிகக் கடுமையான பதிலடியைக் கொடுத்துள்ளது.

அதிமுக வெளியிட்டுள்ள அறிக்கையில், “வரலாற்றைப் படிக்காததால் தான் இதுபோன்ற முதிர்ச்சியற்ற பேச்சுக்கள் வருகின்றன” என்று முதலமைச்சர் விஜய்யை மிகக் காரசாரமாகச் சாடியுள்ளது. தமிழக வரலாற்றின் ஒப்பில்லா மற்றும் ஒப்பற்ற தலைவர்களான பேரறிஞர் அண்ணா, புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர், மற்றும் புரட்சித்தலைவி அம்மா (ஜெயலலிதா) ஆகியோரின் மாபெரும் திருப்பெயர்களோடு தவெக தலைவர் விஜய்யின் பெயரை இணைத்து எழுதுவதே ஒரு ‘வரலாற்று அசிங்கம்’ என்று அதிமுக தனது கடுமையான கண்டனத்தை வெளிப்படுத்தியுள்ளது.

மேலும், விஜய்யின் ஆரம்பகால சினிமா வாழ்க்கை மற்றும் அவரது குடும்பப் பின்னணியைக் குத்திக்காட்டியுள்ள அதிமுக, “அப்பா எஸ்.ஏ.சந்திரசேகரின் தயவாலும் சிபாரிசுகளாலும் மட்டுமே சினிமாவுக்குள் நுழைந்துவிட்டு, தற்போது மக்கள் செல்வாக்கு பெற்றது போல் பேசுவது வேடிக்கையாக உள்ளது” என்று விமர்சித்துள்ளது. ஈழத் தமிழர் நலனுக்காக நடிகர் சங்கம் நடத்திய நிதி திரட்டும் போராட்டத்தில், பிற நடிகர்கள் தாராளமாக நிதியளித்த போது, விஜய் வெறும் 500 ரூபாய் மட்டுமே வழங்கிய கஞ்சத்தனமான வரலாறு தான் அவருக்கு இருக்கிறது என்றும், தனது சொந்தப் பெற்றோர் மீதே நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தவர் தூய அரசியல் குறித்துப் பேசத் தகுதியற்றவர் என்றும் அதிமுக விளாசியுள்ளது.

“நாங்கள் தீந்துபோன சக்தி அல்ல, உங்களைத் தீர்த்துக்கட்டப் போகும் சக்தி” என்று எச்சரித்துள்ள அதிமுக ஐடி விங், வெறும் சமூக வலைதள ரசிகர்களின் ‘உருட்டல்களை’ நம்பி தவெக அரசியல் செய்யக் கூடாது என்றும் சுட்டிக்காட்டியுள்ளது. தமிழகத்தில் முக்கிய அதிமுக நிர்வாகிகள் மற்றும் எம்.எல்.ஏ-க்கள் சிலர் தவெக-வில் இணைந்து வரும் சூழலில், அதிமுகவின் இந்த அதிரடியான மற்றும் கடுமையான பதிலடி, இரு கட்சிகளுக்கும் இடையே அடிமட்டத் தொண்டர்கள் வரையிலான அரசியல் மோதலை உச்சத்திற்குக் கொண்டு சென்றுள்ளது.