பிரான்ஸ் தலைநகர் பாரிஸின் வடக்குப் பகுதியில் உள்ள போர்ட் டி கிளீச்சி (Porte de Clichy) பகுதியில், மர்ம நபர் ஒருவர் இரு கத்திகளுடன் தெருவில் சென்ற பொதுமக்கள் மீது நடத்திய திடீர் கத்திக்குத்துத் தாக்குதலில் கர்ப்பிணிப் பெண் ஒருவர் உட்பட 3 பெண்கள் படுகாயமடைந்துள்ளனர். பகல் நேரத்தில் நடந்த இந்த அதிர்ச்சிச் சம்பவத்தைத் தொடர்ந்து, தாக்குதலில் ஈடுபட்ட 31 வயதுடைய நபரைப் பணிநேரத்தில் இல்லாதக் காவல்துறை அதிகாரி ஒருவர் உடனடியாகப் மடக்கிப் பிடித்துக் கைது செய்தார்.
காலை 11:30 மணியளவில் பரபரப்பாகக் காணப்பட்ட வீதியில் நடந்த இத்தாக்குதலில் படுகாயமடைந்த மூன்று பெண்களும் உடனடியாக மீட்கப்பட்டுப் அருகில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தாக்குதலுக்கு உள்ளானவர்களில் கர்ப்பிணிப் பெண் ஒருவரின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்களும் காவல் துறையினரும் தெரிவித்துள்ளனர். மற்ற இரு பெண்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பிரெஞ்சுப் போலிஸார், போர்ட் டி கிளீச்சி சுற்றியுள்ள மெட்ரோ மற்றும் டிராம் இரயில் நிலையங்களைத் தற்காலிகமாக மூடிப் பாதுகாப்பை பலப்படுத்தினர். முதற்கட்ட விசாரணையில், கைது செய்யப்பட்ட 31 வயது நபர் கடுமையான மனநலப் பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டவர் என்றும், அவரிடமிருந்து இரண்டு கத்திகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.
இத்தாக்குதலின் பின்னணியில் பயங்கரவாத நோக்கம் உள்ளதா அல்லது மனநலப் பாதிப்பால் நடத்தப்பட்டத் தாக்குதலா என்பது குறித்து பாரிஸ் நகரக் குற்றப்பிரிவு போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் கர்ப்பிணிப் பெண் மீது நடத்தப்பட்ட இந்த வன்முறைச் சம்பவம் பாரிஸ் மக்களிடையே பெரும் அச்சத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.