Posted in

மைக்கை பிடுங்கி எறிந்த டிரம்ப்- கோபத்தில் பாதியில் எழுந்து சென்றார்!

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், பிரபல ஊடகமான என்.பி.சி (NBC) செய்தி நிறுவனத்தின் ‘மீட் தி பிரஸ்’ (Meet the Press) நிகழ்ச்சிக்கு அளித்த பிரத்யேக நேர்காணல், இடையில் ஏற்பட்ட கடுமையான வாக்குவாதத்தால் பாதியிலேயே முறிந்தது. விஸ்கான்சின் மாகாணத்தில் உள்ள ஒரு விவசாயப் பண்ணையில், பின்னணியில் டிராக்டர் மற்றும் வைக்கோல் போர்கள் சூழ இந்த நேர்காணல் நடைபெற்றது. ஆரம்பம் முதலே இடி, மின்னல் மற்றும் பலத்த மழையின் சத்தத்திற்கு இடையே மிகவும் தட்டுத்தடுமாறி நகர்ந்த இந்த விவாதம், இறுதியாக அமெரிக்கத் தேர்தல் முறைகேடு குறித்த கேள்விகளின் போது டிரம்ப் கோபத்தின் உச்சிக்கே சென்றதால் ஒட்டுமொத்தமாக முடிவுக்கு வந்தது.

நேர்காணலை நடத்திய பிரபல ஊடகவியலாளர் கிறிஸ்டன் வெல்கர் (Kristen Welker), டிரம்பின் தேர்தல் முறைகேடு புகார்கள் குறித்து அடுத்தடுத்து அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பினார். குறிப்பாக, கலிபோர்னியா பிரைமரி தேர்தலில் வாக்குகள் எண்ணப்படுவதற்கு ஏன் இத்தனை நாட்கள் ஆகிறது என்றும், அங்கு முறைகேடுகள் நடப்பதாகக் கூறுவதற்கு உங்களிடம் என்ன ஆதாரம் இருக்கிறது என்றும் வெல்கர் பிடிவாதமாகக் கேள்வி எழுப்பினார். இதனால் ஆத்திரமடைந்த டிரம்ப், “நான் ஆதாரங்களைத் தேட வேண்டிய அவசியமில்லை, பார்த்தாலே அது அப்பட்டமாகத் தெரிகிறது” என்று கூறிவிட்டு, ஊடகங்கள் அனைத்தும் ஒருதலைப்பட்சமாகச் செயல்படுவதாகக் குற்றம் சாட்டினார்.

விவாதத்தின் சூடு தாங்க முடியாத டிரம்ப், நேர்காணலை நடத்திய கிறிஸ்டன் வெல்கரைப் பார்த்து, “நீங்கள் ஒன்று ஊழல்வாதியாக இருக்க வேண்டும் அல்லது முட்டாளாக இருக்க வேண்டும்” என்று மேடையிலேயே மிகக் காரசாரமாகச் சாடினார். அத்தோடு நிறுத்தாமல், “உங்கள் என்.பி.சி நிறுவனம், ஏபிசி, சிபிஎஸ், சிஎன்என் என அனைத்துமே பக்கா ஃபிராடு நெட்வொர்க்குகள், உங்களோடு பேசி எனக்கு போதும் போதும் என்றாகிவிட்டது, கிளம்புகிறேன் டார்லிங்!” என்று 10% அக்மார்க் சென்னை பாணியில் “கடுப்ப கிளப்பாதீங்க பாஸ், நான் கிளம்புறேன்” என்ற ரேஞ்சுக்கு செம காண்டாகி, தனது சட்டையில் இருந்த மைக்ரோபோனை விறுவிறுவெனக் கழற்றி அங்கிருந்த மேசையின் மீது வீசி எறிந்துவிட்டு பாதியிலேயே எழுந்து வெளியேறினார்.

கிறிஸ்டன் வெல்கர் எவ்வளவோ தடுத்துப் பார்த்தும், “நேர்மையற்ற ஊடகங்கள் இருக்கும் வரை இந்த நாடு ஒருபோதும் முன்னேறாது” என்று ஆக்ரோஷமாகக் கத்தியபடியே டிரம்ப் கேமரா எல்லைக்கு வெளியே சென்றார். இந்தச் சம்பவம் தொடர்பான வீடியோக்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி உலகளவில் பெரும் சிரிப்பலையையும், அதேநேரம் அமெரிக்க அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. இருப்பினும், மறுநாளே டிரம்ப் இதற்காக வருத்தம் தெரிவித்து, மழையினால் ஏற்பட்ட குளறுபடிகளால்தான் தான் அப்படி நடந்துகொண்டதாகக் கூறி, மீண்டும் என்.பி.சி நிறுவனத்திற்கு மற்றொரு நேர்காணல் தரச் சம்மதித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.