Posted in

A சான்றிதழ் படத்திற்கு மைனர் குழந்தைகளா?- ‘ஜனநாயகன்’ பார்த்த அமைச்சர் ராஜீவ் மீது வெடித்த புது சர்ச்சை!

தமிழ்நாடு முதலமைச்சர் சி.ஜோசப் விஜய் நடிப்பில் ஹெச்.வினோத் இயக்கத்தில் திரைக்கு வந்துள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படத்தைக் காணத் தமிழகம் முழுவதும் திரையரங்குகளில் மக்கள் வெள்ளம் அலைமோதி வருகிறது. இச்சூழலில், ராமநாதபுரத்தில் உள்ள திரையரங்கு ஒன்றிற்குத் தமிழகச் சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் ராஜீவ் தனது குடும்பத்தினர் மற்றும் மைனர் குழந்தைகளுடன் சென்று படம் பார்த்தது புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய திரைப்படத் தணிக்கை வாரியத்தால் (CBFC) ‘ஜனநாயகன்’ திரைப்படத்திற்கு தீவிர வன்முறைக் காட்சிகள் காரணாமாக ‘ஏ’ (Adults Only) சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. தணிக்கை வாரியத்தின் சட்ட விதிகளின்படி 18 வயதிற்குட்பட்ட சிறுவர்கள் ‘ஏ’ சான்று பெற்ற திரைப்படங்களைத் திரையரங்குகளில் பார்க்க அனுமதி கிடையாது. இருப்பினும், ராமநாதபுரம் கேணிக்கரை சாலையில் உள்ள திரையரங்கில் அமைச்சர் ராஜீவ் தனது குடும்பத்துடன் மாலைக் காட்சியைக் காண வந்தபோது, அவருடன் சிறுவர்களும் திரையரங்கிற்குள் அழைத்துச் செல்லப்பட்டனர்.

அமைச்சர் ராஜீவ் தனது மைனர் குழந்தைகளுடன் திரையரங்கில் அமர்ந்து படம் பார்க்கும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலானதைத் தொடர்ந்து, சட்டத்தை மதிக்க வேண்டிய பொறுப்பில் இருக்கும் அரசு அமைச்சரே தணிக்கை வாரிய விதிகளைப் பகிரங்கமாக மீறியுள்ளதாகக் கடுமையான விமர்சனங்கள் எழுந்துள்ளன. மருத்துவருமான அமைச்சர் ராஜீவ், சிறுவர்களை இத்தகைய வன்முறைப் படத்திற்கு அழைத்துச் சென்றது விதிகளுக்குப் புறம்பானது எனக் குழந்தை உரிமை ஆர்வலர்களும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

அரசுத் தரப்பில் திரையரங்குகளுக்குப் பல கண்டிப்பான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில், ‘ஏ’ சான்றிதழ் பெற்ற படத்திற்குச் சிறுவர்களை அனுமதித்த திரையரங்க நிர்வாகத்தின் மீதும் கேள்விகள் எழுப்பப்பட்டு வருகின்றன. விஐபி கலாச்சாரத்தின் காரணமாகத் தணிக்கை விதிகள் காற்றில் பறக்கவிடப்படுவதாக இணையவாசிகளும் பொதுமக்களும் சமூக வலைதளங்களில் தங்களது கண்டனங்களைப் பதிவு செய்து வருகின்றனர்.