மத்திய கிழக்கு பிராந்தியத்தில் அமெரிக்கா மற்றும் ஈரான் இடையேயான மோதல் உச்சகட்டத்தை எட்டியுள்ள நிலையில், அமெரிக்கா விதித்துள்ள கடற்படை முற்றுகையை (Naval Blockade) தங்களுக்குச் சாதகமாக மாற்றி, அமெரிக்காவுக்கு ‘மற்றொரு தோல்வியை’ பரிசளிப்போம் என்று ஈரான் வீராப்புடன் எச்சரித்துள்ளது. ஈரானின் முக்கிய பேச்சுவார்த்தையாளரும் நாடாளுமன்ற சபாநாயகருமான முகமது பாகர் கலிபாஃப் (Mohammad Bagher Ghalibaf) தனது அதிகாரப்பூர்வ டெலிகிராம் பக்கத்தில் இந்தத் தகவலை வெளியிட்டுள்ளார். அமெரிக்காவின் இந்த முற்றுகை நடவடிக்கை ஒரு “போர்க் குற்றம்” என்றும், தங்களை அடிபணிய வைக்க நினைக்கும் எதிரிகளின் கனவு பலிக்காது என்றும் அவர் சாடியுள்ளார்.
முன்னதாக, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் உத்தரவின் பேரில், அமெரிக்க மத்திய கட்டளை அமைப்பு (CENTCOM) கடந்த ஏப்ரல் 13 முதல் ஈரானின் ஒட்டுமொத்த கடற்கரைப் பகுதியையும் குறிவைத்து தீவிரக் கடற்படை முற்றுகையை அமல்படுத்தி வருகிறது. இதன் மூலம் ஈரானிய துறைமுகங்களுக்குச் செல்லும் மற்றும் அங்கிருந்து வெளியேறும் கச்சா எண்ணெய் கப்பல்கள் கடுமையாகக் கட்டுப்படுத்தப்பட்டு வருகின்றன. அண்மையில் கூட ஓமன் வளைகுடாவில் அமெரிக்காவின் உத்தரவுக்குக் கீழ்ப்படியாமல் ஈரான் நோக்கிச் சென்ற ஒரு எண்ணெய் கப்பலை அமெரிக்கப் படைகள் தாக்கிச் செயலிழக்கச் செய்தது சர்வதேச அளவில் பதற்றத்தை அதிகரித்துள்ளது.
இந்தக் கடுமையான கடல்வழி முற்றுகையால் ஈரானின் கச்சா எண்ணெய் ஏற்றுமதி சுமார் 90 சதவீதம் வரை சரிந்துள்ளதோடு, அந்நாட்டுக்குத் தினசரி மில்லியன் கணக்கில் பொருளாதார இழப்பு ஏற்பட்டு வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இருப்பினும், இந்த அழுத்தங்களுக்குப் பணியப் போவதில்லை என்று தெரிவித்துள்ள கலிபாஃப், “நாங்கள் சண்டையிடுவதையோ அல்லது பேச்சுவார்த்தை நடத்துவதையோ மட்டும் செய்யப் போவதில்லை; மாறாக, எங்களுக்கான சரியான நேரத்தில் சண்டையிடுவோம், அதேபோல தகுந்த நேரத்தில் பேச்சுவார்த்தையும் நடத்துவோம்” என்று ஈரானின் வியூகத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
மத்திய கிழக்கில் நிலையான பாதுகாப்பை உருவாக்குவதே தங்களின் இறுதி இலக்கு என்றும், அமெரிக்கா உள்ளிட்ட எதிர்த்தரப்பினர் மீது தங்களுக்கு எள்ளளவும் நம்பிக்கையில்லை என்றும் ஈரான் தெளிவுபடுத்தியுள்ளது. அமெரிக்காவின் இந்தத் தொடர் பொருளாதார மற்றும் இராணுவ முடக்க நடவடிக்கைகளுக்கு எதிராக ஈரான் தனது ஏவுகணை பலம் மற்றும் பிராந்தியக் கூட்டாளிகளின் உதவியோடு பதிலடி கொடுக்கத் தயாராகி வருவதால், ஓமன் வளைகுடா மற்றும் அரபிக்கடல் பகுதிகளில் எப்போது வேண்டுமானாலும் போர் வெடிக்கலாம் என்ற அச்சம் உலக நாடுகளிடையே நிலவி வருகிறது.