தமிழகத்தில் புதிதாகப் பொறுப்பேற்றுள்ள சி. ஜோசப் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழக (தவெக) அரசை, சென்னை மாநகராட்சி மேயர் ஆர். பிரியா மிகக் கடுமையான வார்த்தைகளால் விமர்சித்துள்ளார். திமுக ஆட்சிக் காலத்தில் கொண்டு வரப்பட்டு, தேர்தல் நடத்தை விதிகளால் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த திட்டங்களையே தற்போது தவெக அரசு தங்களது புதிய திட்டங்கள் போல மறுதொடக்கம் செய்து வருவதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார். தவெக அரசு எந்தவொரு புதிய சிந்தனையுமின்றி வெற்று விளம்பர அரசியல் செய்வதாக அவர் சாடியுள்ளார்.
சென்னை ராஜரத்தினம் மைதானத்தில் முதலமைச்சர் விஜய் தொடங்கி வைத்த ‘சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை’ திட்டத்தைக் குறிப்பிட்ட மேயர் பிரியா, இத்திட்டம் கடந்த ஜனவரி மாதமே அன்றைய திமுக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களால் முறைப்படி தொடங்கி வைக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டது என்றார். தேர்தல் குறுக்கீட்டால் நின்ற திட்டத்தை அப்படியே எடுத்து, தவெக ஆட்சியில் கொண்டு வந்தது போல ‘கட் காப்பி பேஸ்ட்’ செய்து ஸ்டிக்கர் ஒட்டிக் கொள்வதாக விமர்சித்தார். தவெக அரசுக்குத் துணிவிருந்தால் சொந்தமாகப் புதிய திட்டங்களைச் செயல்படுத்திப் பெருமை பேச வேண்டும் என சவால் விடுத்துள்ளார்.
மேலும், அரசு விழாக்களில் தவெக கடைப்பிடிக்கும் அரசியல் அநாகரிகம் குறித்தும் மேயர் பிரியா தனது கண்டனங்களைப் பதிவு செய்துள்ளார். “எந்தவொரு காலகட்டத்திலும் அரசு அதிகாரப்பூர்வமாக நடத்தும் நிகழ்ச்சிக்குக் கட்சி கொடிகளைக் கட்டுவது கிடையாது. ஆனால், இன்று சிங்கப்பெண் திட்டத் தொடக்க விழா நடந்த சாலைகள் முழுவதும் தவெக கட்சியின் கொடிகள் அப்பட்டமாகக் கட்டப்பட்டுள்ளன. அரசு நிதியில் நடத்தப்படும் விழாவைக் கட்சி விழாவாக மாற்றுவதுதான் தவெக கற்றுக்கொண்ட ஒழுக்கமா?” என்று அவர் காட்டமாகக் கேள்வி எழுப்பியுள்ளார்.
திமுக கொண்டு வந்த உள்கட்டமைப்புகள் மற்றும் திட்டங்களைத் திறந்து வைத்து தவெக அரசு கிரெடிட் (Credit) தேடிக் கொள்வதாகவும், அதே நேரத்தில் தங்களின் நிர்வாகத் திறமையின்மையால் நடக்கும் தவறுகளுக்கு திமுக மீது பழி போடுவதாகவும் மேயர் பிரியா குறிப்பிட்டுள்ளார். இனியாவது மாற்றுக்கட்சியைக் குறை சொல்வதை நிறுத்திவிட்டு, தங்களுக்குக் கிடைத்துள்ள ஆட்சி அதிகாரத்தைப் பயன்படுத்திப் பொதுமக்களுக்குப் புதிய நன்மைகளைச் செய்ய தவெக முன்வர வேண்டும் என்றும், எந்தத் துறை யாரிடம் இருக்கிறது என்பதை முதலில் தெரிந்துகொண்டு பேச வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.