Posted in

தோள் மேல கை வச்சுக்கோங்க.. ரேபிடோ ஓட்டுநரை வெளுத்தெடுத்த இளம்பெண்!

சென்னையில் பைக் டாக்சிகளில் பயணிக்கும் பெண்களுக்குப் பாதுகாப்பு என்பது தொடர்ந்து கேள்விக்குறியாகி வரும் வேளையில், தங்களுக்கு ஏற்படும் பாலியல் அத்துமீறல்களுக்குப் பெண்களே துணிச்சலுடன் பதிலடி கொடுக்கும் அதிரடிச் சம்பவங்களும் அரங்கேறி வருகின்றன. அந்த வகையில், சென்னையில் நள்ளிரவில் ரேபிடோ (Rapido) பைக் டாக்சியில் பயணித்த இளம்பெண் ஒருவரிடம், “பயமா இருந்தா என் தோள் மேல கை வச்சுக்கோங்க” எனப் பாலியல் தூண்டல் பேச முயன்ற ஓட்டுநருக்கு அந்தப் பெண் தகுந்த பாடம் புகட்டியுள்ளார்.

பாதிக்கப்பட்ட அந்த இளம்பெண், தனது அவசரத் தேவைக்காக நள்ளிரவு நேரத்தில் பைக் டாக்சி ஒன்றை புக் செய்துள்ளார். பைக்கை ஓட்டி வந்த நபர், ஆள் நடமாட்டம் குறைந்த இருட்டான பகுதிக்குள் நுழையும் போது வேகம் குறைத்து, பின்னால் அமர்ந்திருந்த பெண்ணிடம் சில்மிஷத்தில் ஈடுபட முயன்றுள்ளார். மேலும், வண்டியை அலைபாய விடுவது போல் பாசாங்கு செய்துவிட்டு, “பயமா இருந்தா வேணும்னா என் தோள் மேல கை வச்சுக்கோங்க, இடுப்பைப் பிடிச்சுக்கோங்க” என்று பாலியல் சீண்டல் வார்த்தைகளைப் பேசியுள்ளார்.

ஓட்டுநரின் தவறான எண்ணத்தைப் புரிந்துகொண்ட அந்தப் பெண், சற்றும் பதற்றமடையாமல் வண்டியை உடனே நிறுத்துமாறு சத்தம் போட்டுள்ளார். வண்டியை நிறுத்தியதும், கீழே இறங்கிய அந்தப் பெண் ஓட்டுநரைக் கடுமையான வார்த்தைகளால் தட்டிக்கேட்டுள்ளார். அப்போது அந்த ஓட்டுநர் தப்பியோட முயன்றதால், ஆத்திரமடைந்த அந்தப் பெண் அங்கிருந்த ஒரு கட்டை அல்லது கல்லை எடுத்து ஓட்டுநரை நோக்கி வீசி வெளுத்தெடுத்துள்ளார். இதில் அந்த காமுக ஓட்டுநரின் மண்டை உடைந்து இரத்தம் கொட்டியது.

சத்தம்கேட்டு ஓடிவந்த அப்பகுதி பொதுமக்கள், மண்டை உடைந்த ஓட்டுநரைப் பிடித்துக் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். காவல்துறையினர் நடத்திய முதற்கட்ட விசாரணையில், பெண்களிடம் தொடர்ந்து இதுபோன்று அத்துமீறலில் ஈடுபட்டு வந்த ஓட்டுநரின் குற்ற எண்ணம் அப்பட்டமாகத் தெரியவந்தது. பெண்களின் பாதுகாப்பிற்காகத் தமிழக அரசு ‘சிங்கப்பெண்’ அதிரடிப்படையைத் தொடங்கியுள்ள நிலையில், பயந்து நடுங்காமல் காமுகனுக்குப் பெண்ணே நேரடியாக மண்டையை உடைத்துப் பாடம் புகட்டிய இந்தச் சம்பவம் சமூக வலைதளங்களில் பெரும் பாராட்டுகளைப் பெற்று வருகிறது.