Posted in

ரீல்ஸ் போடும் அமைச்சர், தற்குறி கூட்டம் – தவெக அரசைப் பொதுமேடையில் திட்டிய மேயர் பிரியா!

சென்னையில் அண்மையில் நடைபெற்ற அரசுப் பள்ளி நிகழ்ச்சி ஒன்றில், குத்துவிளக்கு ஏற்றுவது மற்றும் ரிப்பன் வெட்டுவது தொடர்பாகத் தவெக எம்.எல்.ஏ பல்லவிக்கும், சென்னை மேயர் பிரியாவிற்கும் இடையே கடுமையான பொது மேடை மோதல் வெடித்தது. இந்த விவகாரம் தமிழக அரசியல் களத்தில் பெரும் புயலைக் கிளப்பிய நிலையில், தற்போது தவெகவின் பெயரை நேரடியாகக் குறிப்பிடாமல் முதலமைச்சர் விஜய் தலைமையிலான புதிய அரசைக் கடுமையான சொற்களால் விமர்சித்துப் பேசி மேயர் பிரியா புதிய சர்ச்சையைக் கிளப்பியுள்ளார்.

சென்னையில் நடைபெற்ற பொது நிகழ்ச்சி ஒன்றில் பேசிய மேயர் பிரியா, “இன்றைக்கு தமிழ்நாட்டில் ரீல்ஸ் (Reels) எது, ரியாலிட்டி (Reality) எது என்று தெரியாமல் ஒரு கூட்டம் சுற்றிக் கொண்டிருக்கிறது; அமைச்சராக இருப்பவரே தினமும் சமூக வலைதளங்களில் ரீல்ஸ் போட்டுக் கொண்டிருக்கிறார்” என்று தவெக அமைச்சரவையை மிகக் கூர்மையாகச் சாடினார். தவெக அரசு ஆட்சிக்கு வந்து ஒரு மாதம் நிறைவடைந்த நிலையில், அவர்களின் நிர்வாகக் குறைபாடுகளைச் சுட்டிக்காட்டும் விதமாக அவரது பேச்சு அமைந்திருந்தது.

தொடர்ந்து தவெக நிர்வாகிகளைத் தாக்கிப் பேசிய மேயர் பிரியா, “நாங்கள் அதைச் செய்வோம், இதைச் செய்வோம் என்று கவர்ச்சிகரமான, பொய்யான வாக்குறுதிகளைக் கொடுத்துவிட்டு இன்றைக்கு ஒரு தற்குறி கூட்டம், கவர்ச்சிக் கூட்டம் ஆட்சிக்கு வந்துள்ளது; இவர்களைப் போன்ற தற்குறிகளுக்கு உண்மை நிலையைச் சொன்னால் உடனே கோபம் வந்துவிடுகிறது” என ஆவேசமாகப் பேசினார். தவெக அரசை அவர் ‘தற்குறி கூட்டம்’ என ஒருமையில் சாடியிருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

மேயர் பிரியாவின் இந்த அதிரடி மற்றும் காட்டமான விமர்சன வீடியோ சமூக வலைதளங்களில் வெளியானதைத் தொடர்ந்து, தவெக தொண்டர்கள் மற்றும் அமைச்சர்களின் ஆதரவாளர்கள் தங்களின் கடுமையான கண்டனங்களைப் பதிவு செய்து வருகின்றனர். ஏற்கனவே சென்னை மாநகராட்சி நிகழ்ச்சியில் தவெக பெண் எம்.எல்.ஏ பல்லவியை மேயர் பிரியா வேண்டுமென்றே அவமதித்ததாகப் புகார்கள் இருக்கும் வேளையில், தற்போது தவெக அரசை இப்படிப் பகிரங்கமாக விமர்சித்துள்ளது திமுக – தவெக இடையேயான அரசியல் யுத்தத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் சென்றுள்ளது.