Posted in

மினாப் பள்ளி தாக்குதல் புகைப்படங்கள் ஏஐ-உருவாக்கம் என்ற டிரம்பின் கூற்றுக்கு ஆசிரியர் கொந்தளிப்பு!

ஈரானின் மினாப் (Minab) நகரில் உள்ள சிறுமிகள் தொடக்கப் பள்ளி மீது நடத்தப்பட்ட அமெரிக்க ஏவுகணைத் தாக்குதலின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் ‘செயற்கை நுண்ணறிவால்’ (AI-generated) உருவாக்கப்பட்டவையாக இருக்கலாம் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்த கருத்து உலகளவில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. 175க்கும் மேற்பட்ட குழந்தைகள் மற்றும் ஆசிரியர்கள் உயிரிழந்ததாகக் கூறப்படும் இந்தத் கொடூரத் தாக்குதலின் உண்மைத்தன்மையையே கேள்விக்குட்படுத்தும் வகையில் டிரம்ப் பேசியதற்கு, தாக்குதலில் காயமடைந்து உயிர் பிழைத்த பள்ளி ஆசிரியை ஒருவர் அதிர்ச்சியையும் ஆத்திரத்தையும் வெளிப்படுத்தியுள்ளார்.

ஃபோக்ஸ் நியூஸ் (Fox News) ஊடகத்திற்கு அளித்த பேட்டியில், தாக்குதல் நடந்த இடத்தில் கண்டெடுக்கப்பட்ட அமெரிக்க ‘டொமாஹாக்’ (Tomahawk) ஏவுகணைகளின் பாகங்கள் மற்றும் சேதமடைந்த புகைப்படங்கள் குறித்துக் கேட்கப்பட்ட கேள்விக்கு, “அவை ஏஐ தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்ட பொய்யான படங்களாக இருக்கலாம்” என்று அதிபர் டிரம்ப் பதிலளித்தார். மேலும் இது குறித்த அமெரிக்க ராணுவத்தின் புலனாய்வு அறிக்கையை வெளியிடுவது பற்றித் கேட்டபோது, இராணுவ அதிகாரிகளிடம் கேட்டே முடிவு செய்ய முடியும் என்றும் அவர் கூறினார்.

டிரம்பின் இந்த அறிவிப்புக்கு பதிலளித்துப் பேசிய தாக்குதலில் காயமடைந்த மினாப் பள்ளி ஆசிரியை, “தாக்குதல் நடந்த அந்த வினாடியில் நாங்கள் தூக்கி வீசப்பட்டு காற்றில் பறந்து விழுந்தோம்; எங்களின் கண்கள் முன்னால் குழந்தைகள் இரத்த வெள்ளத்தில் துடித்த காட்சி நிஜமானது” என்று உருக்கமாகக் குறிப்பிட்டார். தங்களின் தாங்க முடியாத இழப்பையும், தாக்குதலின் கொடூரத்தையும் ‘ஏஐ போலி படம்’ என்று கூறி அமெரிக்க அதிபர் அடியோடு மறுப்பது, உயிரிழந்த பிஞ்சு குழந்தைகளின் நினைவையும் தங்களின் வேதனையையும் கொச்சைப்படுத்துவதாக உள்ளது என்று அவர் கண்ணீருடன் சாடினார்.

செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தின் வளர்ச்சியால் போர்க் களங்களில் நடக்கும் உண்மை நிகழ்வுகளை மறைக்கவும், தவறான தகவல்களைப் பரப்பவும் அரசுகள் ஏஐ சாக்குகளைப் பயன்படுத்துவதாக மனித உரிமை அமைப்புகள் குற்றம் சாட்டுகின்றன. மினாப் பள்ளித் தாக்குதல் பழைய உளவுத்துறை தரவுகளின் அடிப்படையில் தவறுதலாக நடத்தப்பட்டதாகத் தகவல்கள் கசிந்துள்ள நிலையில், டிரம்ப் நிர்வாகம் தனது பொறுப்பைத் தட்டிக்கழிக்க ஏஐ தொழில்நுட்பத்தை ஒரு கேடயமாகப் பயன்படுத்துவதாக சர்வதேச ஊடகங்கள் விமர்சித்து வருகின்றன.