தமிழக முதலமைச்சராகப் பதவியேற்ற பிறகு முதன்முறையாகத் தமிழக வெற்றிக் கழகத் (தவெக) தலைவர் சி.ஜே.விஜய் இன்று (ஜூன் 12, 2026) கர்நாடகா மாநிலத்திற்கு அதிரடியாகத் தனது அரசு மற்றும் ஆன்மீகப் பயணத்தைத் தொடங்கியுள்ளார். புதுடெல்லியில் நடைபெற்ற நிதி ஆயோக் ஆட்சிமன்றக் குழுக் கூட்டத்தை வெற்றிகரமாக முடித்துக்கொண்ட முதலமைச்சர் விஜய், அங்கிருந்து தனி விமானம் மூலம் நேராகக் கர்நாடகா மாநிலம் மங்களூரு சர்வதேச விமான நிலையத்திற்கு இன்று மதியம் 12:30 மணியளவில் வந்தடைந்தார் .
மங்களூரு விமான நிலையத்திலிருந்து பலத்த பாதுகாப்புடன் சாலை மார்க்கமாக உடுப்பி மாவட்டத்தில் உள்ள உலகப் புகழ்பெற்ற கொல்லூர் ஸ்ரீ மூகாம்பிகை அம்மன் கோவிலுக்கு முதலமைச்சர் விஜய் சென்றார் . அங்கு அம்மனைத் தரிசித்து, தவெக அரசின் மக்கள் நலத்திட்டங்கள் சிறக்க வேண்டி அவர் சிறப்புப் பூஜைகள் மற்றும் வழிபாடுகளை மேற்கொண்டார். விஜய் முதலமைச்சராகப் பொறுப்பேற்ற பிறகு அண்டை மாநிலமான கர்நாடகாவிற்கு மேற்கொள்ளும் முதல் பயணம் இது என்பதால், அவரது வருகையையொட்டி உடுப்பி மாவட்டக் காவல்துறை கண்காணிப்பாளர் (SP) ஹரிராம் சங்கர் தலைமையில் அசம்பாவிதங்கள் ஏதும் நடக்காத வண்ணம் வரலாறு காணாத வகையில் மிக பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
முதலமைச்சர் விஜய்யின் இந்தத் திடீர் கர்நாடக வருகைக்கு ஒருபுறம் ஆன்மீகப் பின்னணி இருந்தாலும், மறுபுறம் இதற்குப் பலத்த அரசியல் எதிர்ப்புகளும் கிளம்பின. கர்நாடக அரசு காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணை (Mekedatu Dam) கட்ட முயல்வதைத் தமிழக அரசு மிகக் கடுமையாக எதிர்த்து வரும் நிலையில், ‘கர்நாடக ரக்ஷண வேதிகே’ (Karnataka Rakshana Vedike) அமைப்பினர் மங்களூரு விமான நிலையத்திலும், முதல்வர் விஜய் செல்லும் வழிநெடுகிலும் கறுப்புக் கொடி காட்டப் போவதாக அச்சுறுத்தியிருந்தனர்.. இதனால் அசாதாரண சூழல் நிலவியதால், தமிழகக் காவல்துறையைச் சேர்ந்த டிஐஜி மற்றும் எஸ்பி உள்ளிட்ட 40 பேர் கொண்ட பிரத்தியேக கமாண்டோ பாதுகாப்புப் படையினரும் (Z+ Security Cover) கர்நாடகா விரைந்து விஜய்க்கு அரணாக நின்றனர்.
இந்த ஆன்மீகப் பயணத்தின் போது கர்நாடக மாநிலப் பொதுமக்களையோ அல்லது அம்மாநில அரசியல் தலைவர்களையோ சந்திப்பதற்கான அதிகாரப்பூர்வ நிகழ்வுகள் எதுவும் முதலமைச்சரின் பயணத் திட்டத்தில் சேர்க்கப்படவில்லை. கோவிலில் தரிசனத்தை முடித்துக்கொண்டு மாலை 5:30 மணியளவில் மங்களூரு விமான நிலையத்திலிருந்து மீண்டும் தனி விமானம் மூலம் சென்னைக்கு முதலமைச்சர் விஜய் திரும்புகிறார். மேகதாது அணை விவகாரத்தில் கர்நாடக முதல்வர் சித்தராமையாவுடன் ஏற்கனவே தவெக அரசு சுமுகமான முறையில் பேச்சுவார்த்தை நடத்த விரும்புவதாகத் தெரிவித்திருந்த சூழலில், விஜய்யின் இந்த முதல் கர்நாடகா பயணம் இரு மாநில அரசியல் வட்டாரங்களிலும் உற்றுநோக்கப்படும் முக்கிய நிகழ்வாக மாறியுள்ளது.