Posted in

விவசாயிகளுக்கு குட் நியூஸ்; முதல்வர் விஜய் அதிரடி அறிவிப்பு!

காவிரி டெல்டா மற்றும் டெல்டா அல்லாத மாவட்டங்களில் குறுவை நெல் சாகுபடியை பெருமளவில் ஊக்குவித்து, விவசாயிகளின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கும் நோக்கில், ரூ.134.83 கோடி மதிப்பீட்டிலான புதிய “குறுவை சிறப்புத் தொகுப்புத் திட்டம் – 2026” ஐ தமிழக முதலமைச்சர் சி.ஜே.விஜய் இன்று (ஜூன் 12, 2026) அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார் . தமிழ்நாட்டின் நெல் சாகுபடி என்பது மாநிலத்தின் உணவுப் பாதுகாப்பிற்கும், உழவர்களின் பொருளாதாரத்திற்கும் மிகவும் முக்கியமானது என்பதால் இந்தத் திட்டத்தை தவெக அரசு உடனடியாக முடுக்கிவிட்டுள்ளது.

ஆண்டுதோறும் ஜூன் 12-ஆம் தேதியான இன்று குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணை திறக்கப்படுவது வழக்கம் என்றாலும், நடப்பு தென்மேற்குப் பருவமழை தள்ளிப்போவதாலும் ‘எல்நினோ’ தாக்கத்தால் மழைப்பொழிவு 90 சதவீதத்திற்கும் குறைவாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளதாலும் நீர்வரத்து குறைந்துள்ளது. தற்போது மேட்டூர் அணையின் நீர்மட்டம் 79.56 அடியாக மட்டுமே இருப்பதால், இன்று அணையைத் திறக்க முடியாத சூழல் நிலவுகிறது. இதனால் டெல்டா பகுதிகளில் வழக்கம் போல் நடைபெறும் 5 லட்சம் ஏக்கர் சாகுபடி பாதிக்கப்படாமல் இருக்கவும், வடிமுனைக் குழாய்க் கிணறுகள் (Filter Points) மூலம் 3.55 லட்சம் ஏக்கரில் சாகுபடியைத் தொடரவும் இந்தச் சிறப்பு நிதித் தொகுப்பை முதல்வர் விஜய் அறிவித்துள்ளார் .

விவசாயிகளுக்குத் தேவையான உள்கட்டமைப்புகளை மேம்படுத்தும் வகையில், நீர்வளத்துறை மற்றும் வேளாண் பொறியியல் துறை மூலமாகத் டெல்டா மாவட்டங்களில் உள்ள ஏ, பி, சி மற்றும் டி பிரிவு வாய்க்கால்களை தூர்வாரும் பணிகள் போர்க்கால அடிப்படையில் எடுக்கப்பட்டுள்ளன. இதில், ரூ.100 கோடி செலவில் 4,971 கிலோமீட்டர் நீளமுள்ள ஏ மற்றும் பி வாய்க்கால்களை தூர்வாரும் பணிகள் ஏற்கனவே 97 சதவீதம் நிறைவடைந்துள்ளன. மேலும், ரூ.10 கோடி செலவில் 2,325 கிலோமீட்டர் நீளமுள்ள சி மற்றும் டி பிரிவு வாய்க்கால்களும் தூர்வாரப்பட்டு பாசனத்திற்குத் தயார் செய்யப்பட்டுள்ளன.

விவசாயப் பணிகளுக்கு எவ்விதத் தடங்கலும் வராத வண்ணம், குறுவை சாகுபடிக்காக 10,714 மெட்ரிக் டன் சான்று பெற்ற நெல் விதைகளும், 4.02 லட்சம் மெட்ரிக் டன் உரங்களும் கூட்டுறவுச் சங்கங்கள் மூலம் தற்பொழுது தயார் நிலையில் இருப்பு வைக்கப்பட்டுள்ளன. மிக முக்கியமாக, நிலத்தடி நீரைப் பயன்படுத்தி விவசாயிகள் தடையின்றிச் சாகுபடி செய்ய ஏதுவாக, நாளொன்றுக்கு 18 மணி நேரம் தடையில்லா மும்முனை மின்சாரம் (Three-phase electricity) வழங்கப்படும் என்றும் முதலமைச்சர் விஜய் அறிவித்துள்ளார். பருவமழை பொய்த்துள்ள இந்த இக்கட்டான காலக்கட்டத்தில், தவெக அரசு அறிவித்துள்ள இந்த ரூ.134.83 கோடி குறுவை தொகுப்பு திட்டம் டெல்டா விவசாயிகளுக்குப் பெரும் நிம்மதியை அளித்துள்ளது.