Posted in

நிதிப் பற்றாக்குறைக்கு முற்றுப்புள்ளி! தமிழக அரசு அதிரடி உத்தரவு!

தமிழ்நாடு அரசின் வரி மற்றும் வரியில்லா வருவாயை நிலையான முறையில் அதிகரிக்கும் நோக்கிலும், நிதி ஆதாரங்களைப் பெருக்குவதற்கான புதிய வழிகளைக் கண்டறியும் நோக்கிலும் 6 பேர் கொண்ட ‘மாநில வருவாய் பெருக்கக் குழு’வை அமைத்துத் தமிழக அரசு அதிரடியாக அரசாணை வெளியிட்டுள்ளது. நாட்டின் புகழ்பெற்ற பொருளாதார நிபுணரும், மத்திய திட்டக்குழுவின் முன்னாள் துணைத் தலைவருமான மாண்டெக் சிங் அலுவாலியா இக்குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

தமிழக நிதித்துறை வெளியிட்டுள்ள இந்த உத்தரவின்படி, இக்குழுவானது மாநிலத்தின் சொந்த வரி வருவாய் மற்றும் வரியில்லா வருவாயை அதிகரிப்பதற்கான கொள்கை முடிவுகள் மற்றும் நிர்வாகச் சீர்திருத்தங்கள் குறித்த விரிவான பரிந்துரைகளை அரசுக்கு வழங்கும். மேலும், வரி ஏய்ப்புகளைத் தடுத்தல், நிர்வாகச் செயல்திறனில் உள்ள குறைபாடுகளைச் சரிசெய்தல், புதிய மற்றும் முழுமையாகப் பயன்படுத்தப்படாத வருவாய் ஆதாரங்களை அடையாளம் காணுதல் போன்ற முக்கியப் பணிகளையும் இக்குழு மேற்கொள்ளவுள்ளது.

மாண்டெக் சிங் அலுவாலியா தலைமையிலான இக்குழுவில், தேசிய பயன்பாட்டுப் பொருளாதார ஆராய்ச்சி கவுன்சில் பேராசிரியர் கே.பி. கிருஷ்ணன், சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) வரி விவகார நிபுணர் அர்பிந்த் மோடி, மத்திய மறைமுக வரிகள் வாரியத்தின் முன்னாள் தலைவர் நஜிப் ஷா, நிதித்துறை கூடுதல் முதன்மைச் செயலாளர் எம்.ஏ. சித்திக் மற்றும் மெட்ராஸ் வளர்ச்சி ஆராய்ச்சி நிறுவன இயக்குநர் எம். சுரேஷ் பாபு ஆகியோர் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

இக்குழு தனது முழுமையான ஆய்வு அறிக்கையைத் தயாரித்து, வரும் 3 மாதங்களுக்குள் தமிழ்நாடு அரசிடம் சமர்ப்பிக்க வேண்டும் என அரசாணையில் திட்டவட்டமாக உத்தரவிடப்பட்டுள்ளது. வரவிருக்கும் தமிழ்நாடு பட்ஜெட் கூட்டத்தொடர் மற்றும் நிதி சவால்களுக்கு இடையே, மாநிலத்தின் நிதித் தன்னாட்சியை உயர்த்தவும் வளர்ச்சித் திட்டங்களுக்கான நிதி நெருக்கடியைச் சமாளிக்கவும் அமைக்கப்பட்டுள்ள இக்குழுவின் பரிந்துரைகள் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன.