Posted in

வில்லிவாக்கம் மக்களுக்கு அமைச்சர் ஆதவ் இறக்கிய பிரம்மாஸ்திரம்! – ‘நம்ம ஆதவ்.. நம்ம வில்லிவாக்கம்’ இணையதளம் அறிமுகம்!

சென்னை வில்லிவாக்கம் தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், தமிழக பொதுப்பணி மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சருமான ஆதவ் அர்ஜுனா, தனது தொகுதி மக்களின் தேவைகள் மற்றும் குறைகளை உடனுக்குடன் தீர்க்கும் வகையில் ‘நம்ம ஆதவ்.. நம்ம வில்லிவாக்கம்’ என்ற பிரத்யேக இணையதளத்தை அதிகாரப்பூர்வமாகத் தொடங்கி வைத்துள்ளார். தொகுதி மக்களுக்கும் நிர்வாகத்திற்கும் இடையே வெளிப்படையான தொடர்பை ஏற்படுத்தும் உயரிய நோக்கில் இந்த நவீன டிஜிட்டல் தளம் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

வில்லிவாக்கம் தொகுதி பொதுமக்கள் இனி அரசு அலுவலகங்களுக்கு அலைந்து திரியாமல், தங்களது புகார்கள் மற்றும் கோரிக்கைகளை இந்த இணையதளத்தின் மூலம் நேரடியாக ஆன்லைனில் பதிவு செய்ய முடியும். மேலும், பொதுமக்கள் தாக்கல் செய்த மனுக்களின் தற்போதைய நிலை என்ன என்பதைக் கண்டறிய ‘ட்ராக் மனு’ (Track Petition) என்ற சிறப்பு வசதியும் இதில் செய்யப்பட்டுள்ளது. எழுத்துப்பூர்வமாக மனு அளிக்க இயலாதவர்களுக்காகக் குரல் பதிவு (Voice Record) மூலமாகவும் குறைகளைப் பதிவு செய்யும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது கூடுதல் சிறப்பம்சமாகும்.

இந்த இணையதளத்தில் தொகுதி தொடர்பான அனைத்து முக்கிய அறிவிப்புகள், வளர்ச்சித் திட்டப் பணிகள், செய்திகள், அதிகாரப்பூர்வ புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் உடனுக்குடன் பதிவேற்றம் செய்யப்பட உள்ளன. தொகுதி நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மையையும், விரைவான தீர்வுகளையும் உறுதி செய்வதே ‘எதிர்பார் வில்லிவாக்கம்’ என்ற கருப்பொருளோடு இயங்கும் இந்தத் தளத்தின் முக்கிய நோக்கமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொகுதி மக்களுடன் தொடர் தொடர்பில் இருக்கவும், அவர்களின் தேவைகளைக் களத்திலேயே நேரில் கண்டறிந்து தீர்த்து வைக்கவும் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா எடுத்திருக்கும் இந்த நவீன முயற்சி வில்லிவாக்கம் தொகுதி மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் பலரும் இந்தத் தளத்தினைத் தங்களது கருத்துக்களைப் பகிரவும், குறைநிறைகளைத் தெரிவிக்கவும் பயன்படுத்தத் தொடங்கியுள்ளனர்.