Posted in

அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்த 4 பேர் மீதான தகுதி நீக்க மனு: வரும் 12-ல் இறுதிக்கட்ட விசாரணை!

அதிமுகவில் இருந்து விலகித் தமிழக வெற்றிக் கழகத்தில் (தவெக) இணைந்த மரகதம் குமரவேல், பி. சத்தியபாமா, எஸ். ஜெயக்குமார் மற்றும் இசக்கி சுப்பையா ஆகிய 4 பேருக்கு எதிரான தகுதி நீக்க மனுக்கள் தொடர்பாகச் சென்னை தலைமைச் செயலகத்தில் சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் தலைமையில் விசாரணை நடைபெற்றது. இந்த விசாரணையில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்களான எஸ். ஜெயக்குமார் மற்றும் இசக்கி சுப்பையா ஆகியோர் நேரில் ஆஜராகி தங்களுடைய விளக்கங்களை அளித்தனர். சத்தியபாமா மற்றும் மரகதம் குமரவேல் ஆகிய இருவர் சார்பில் வழக்கறிஞர்கள் ஆஜராகித் தங்களது வாதங்களை முன்வைத்தனர்.

அதிமுக தரப்பில் அக்ரி எஸ்.எஸ். கிருஷ்ணமூர்த்தி, தளவாய் சுந்தரம் மற்றும் வழக்கறிஞர் இன்பதுரை ஆகியோர் பங்கேற்றுத் தங்களது தரப்பு வாதங்களை எடுத்துரைத்தனர். விசாரணைக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய வழக்கறிஞர் இன்பதுரை, இரு தரப்பினரின் ஒப்புதலுடன் வரும் 12-ஆம் தேதி மாலை 4:30 மணிக்கு மீண்டும் விசாரணை நடைபெறவுள்ளதாகவும், அன்றைய தினம் இறுதிக்கட்ட விசாரணை நடைபெறும் என்றும் தெரிவித்தார். மேலும், வழக்கு விசாரணையில் இருப்பதால் இப்போது கருத்து கூறுவது சரியாக இருக்காது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

சபாநாயகரின் அழைப்பினை ஏற்று உரிய முறையில் விசாரணை நடைபெற்றதாகவும், கேட்கப்பட்ட கேள்விகளுக்குத் தகுந்த பதில்கள் அளிக்கப்பட்டிருப்பதாகவும் முன்னாள் எம்.எல்.ஏ ஜெயக்குமார் தெரிவித்தார்.

அதே வேளையில், தவெக வழக்கறிஞர் சூரிய பிரகாசம் பேசுகையில், சபாநாயகர் முன் நிலுவையில் உள்ள வழக்கு என்பதால் விசாரணையில் நடைபெற்ற விவரங்களைப் இப்போது வெளிப்படையாகப் பகிர்வது முறையாக இருக்காது எனக் கூறினார்.

தகுதி நீக்க மனுக்கள் தொடர்பான அனைத்துத் தரப்பு வாதங்களையும் கேட்டறிந்து வரும் 12-ஆம் தேதி மாலை இறுதிக்கட்ட விசாரணை முடிந்த பிறகு சபாநாயகர் உத்தரவு பிறப்பிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.