கூட்டணி அமைத்துப் போட்டியிடுவதும் அரசுக்கு ஆதரவு அளிப்பதும் அரசியல் நடைமுறை என்றாலும், கொள்கை அடிப்படையிலான விவகாரங்களில் மாற்று கருத்துக்களைத் தெரிவிப்பது அவசியம் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் (விசிக) மாநிலப் பொருளாளர் எஸ்.எஸ். பாலாஜி சமூக வலைதளப் பதிவில் குறிப்பிட்டுள்ளார். கூட்டணி தர்மத்திற்காக மக்கள் குரலை நசுக்க முடியாது என்ற தங்களின் கட்சியின் அரசியல் நிலைப்பாட்டை அவர் நியாயப்படுத்தியுள்ளார்.
அவர் வெளியிட்ட சமூக வலைதளப் பதிவில், அதிகாரத்திற்காகவோ அல்லது தேர்தல் வெற்றிக்காகவோ கூட்டணிக் கட்சியின் தவறுகளையோ, மக்கள் விரோதப் போக்கையோ தட்டிக்கேட்காமல் மௌனம் காப்பது அரசியல் பிழைப்புவாதம் என்று விமர்சித்துள்ளார். தவறு நடக்கும்போது கூட்டணியைப் பற்றிக் கவலைப்படாமல் அதை வெளிப்படையாகச் சுட்டிக்காட்டுவதே உண்மையான மக்கள் நலம் விரும்பும் கட்சியின் பொறுப்பாகும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
கூட்டணிக் கட்சிகளிடையே கொள்கை மாறுபாடுகளும் திட்டங்கள் குறித்த மாறுபட்ட பார்வைகளும் இருப்பது இயல்பானது என்பதால் விசிக தொடர்ந்து மக்கள் பிரச்சனைகளுக்காகக் குரல்கொடுக்கும் எனக் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
தமிழகத்தில் அரசியல் களச்சூழல் சூடுபிடித்துள்ள நிலையில், ஆளும் கூட்டணிக்குள் நிலவும் கருத்து வேறுபாடுகள் குறித்தும், விசிகவின் இந்த அறிக்கை குறித்தும் அரசியல் வட்டாரங்களில் பல்வேறு விவாதங்கள் எழுந்துள்ளன.