ஆப்கானிஸ்தானில் நிலவி வரும் கடுமையான உள்கட்டமைப்பு பற்றாக்குறை மற்றும் பாரம்பரிய விவசாய முறைகளை நவீனப்படுத்துவதற்காக, இந்தியாவின் உயரிய தொழில்நுட்ப உதவிகளை அந்நாடு பகிரங்கமாகக் கோரியுள்ளது. புது தில்லியில் உள்ள ஆப்கானிஸ்தான் தூதரகத்தின் தற்காலிகப் பொறுப்பாளர் (Charge d’Affaires) முஃப்தி நூர் அகமது நூர் மற்றும் ஆப்கானிஸ்தான் விவசாயத்துறை அமைச்சர் மவலாவி அதாவுல்லா ஒமாரி ஆகியோர் அடங்கிய தலிபான் தூதுக்குழு, இந்திய அரசு மற்றும் வர்த்தகப் பிரமுகர்களுடன் நடத்திய இருதரப்புப் பேச்சுவார்த்தையின் போது இந்த அதிரடி கோரிக்கையை முன்வைத்துள்ளது.
ஆப்கானிஸ்தான் தூதர் நூர் அகமது நூர் செய்தியாளர்களிடம் பேசுகையில், “இந்தியாவுக்கும் ஆப்கானிஸ்தானுக்கும் இடையேயான உறவு பல நூற்றாண்டுகள் பழமையானது; இரு நாடுகளின் கலாச்சாரமும் மதிப்புகளும் ஒன்றோடொன்று பிணைந்துள்ளன” என்று குறிப்பிட்டார். ஆப்கானிஸ்தானில் கணிசமான நீர் ஆதாரங்கள் இருந்தபோதிலும், முறையான தண்ணீர் மேலாண்மை (Water Management) இல்லாததால் பெரும் தட்டுப்பாடு நிலவுவதாகவும், குறிப்பாகத் தலைநகர் காபூலில் நிலவும் குடிநீர் நெருக்கடியைத் தீர்க்க இந்தியாவின் நீர் விநியோகக் கட்டமைப்புத் தொழில்நுட்பம் தங்களுக்கு அவசரமாகத் தேவைப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.
மேலும், ஆப்கானிஸ்தான் மக்கள் தொகையில் சுமார் 80 சதவீதம் பேர் விவசாயம் மற்றும் கால்நடை வளர்ப்பையே நம்பியுள்ளனர் என்று அந்நாட்டின் விவசாயத்துறை அமைச்சர் மவலாவி அதாவுல்லா ஒமாரி சுட்டிக்காட்டினார். தற்பொழுது ஆப்கானிஸ்தானில் சிறந்த பழங்கள் மற்றும் பயிர்கள் விளைந்தாலும், அறுவடைக்குப் பிந்தைய மேலாண்மை, பாதுகாப்பான சேமிப்புக் கிடங்குகள் (Cold Chains) மற்றும் நவீனப் பேக்கேஜிங் தொழில்நுட்பங்கள் இல்லாததால் பெரும் இழப்பு ஏற்படுவதாகவும், இதில் இந்தியப் பெருநிறுவனங்கள் முதலீடு செய்ய வேண்டும் என்றும் அவர் அழைப்பு விடுத்தார்.
முன்னதாக, இந்தியாவின் மத்திய விவசாயத்துறை அமைச்சர் சிவராஜ் சிங் சௌகானை நேரில் சந்தித்த ஆப்கானிஸ்தான் குழுவினர், கோதுமை உற்பத்தித் திறனை அதிகரிக்க மேம்பட்ட விதை தொழில்நுட்பங்களை வழங்குமாறு கோரினர். இதற்குப் பதிலளித்த அமைச்சர் சௌகான், ஆப்கானிஸ்தானின் உணவுப் பாதுகாப்பை உறுதி செய்யக் காலநிலை மாற்றத்தைத் தாங்கி வளரும் உயர்தர விதைகள் மற்றும் இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சிலின் (ICAR) விஞ்ஞானப் பூர்வ உதவிகளை வழங்க இந்தியா தயாராக இருப்பதாக உறுதியளித்தார். இரு நாடுகளுக்கும் இடையே நீண்ட கால வேளாண் ஒத்துழைப்பிற்கான ‘கூட்டுப் பணிக்குழு’ (Joint Working Group) ஒன்றை அமைக்கவும் இச்சந்திப்பில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.