Posted in

கள்ளக்குறிச்சி எம்எல்ஏ அருள் விக்னேஷ் மீது வழக்குப்பதிவு செய்யக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு

மாவட்ட ஆட்சியருக்கு ஆபாசக் குறுஞ்செய்தி அனுப்பியதாக எழுந்துள்ள புகாரில், கள்ளக்குறிச்சி தொகுதி தமிழக வெற்றிக் கழக (தவெக) சட்டமன்ற உறுப்பினர் அருள் விக்னேஷ் மீது வழக்குப்பதிவு செய்ய உத்தரவிடக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதிமுக வழக்கறிஞர் திரிசூலி என்பவர் சார்பில் இந்த மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

செய்தித்தாள்கள், தொலைக்காட்சிகள் மற்றும் சமூக வலைதளங்களில் இது தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளதாகவும், இந்த விவகாரம் குறித்து விசாரித்து 7 நாட்களுக்குள் அறிக்கை அளிக்குமாறு தேசிய மகளிர் ஆணையம் தமிழக டிஜிபிக்கு உத்தரவிட்டுள்ளதாகவும் அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. முன்னதாக, இது குறித்து நடவடிக்கை எடுக்கக் கோரி கடந்த நவம்பர் 16-ஆம் தேதி தமிழக டிஜிபியிடம் புகார் மனு அளிக்கப்பட்டதாகவும், ஆனால் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் மனுதாரர் தெரிவித்துள்ளார்.

குற்றம் நடந்ததாகத் தாங்கள் கூறவில்லை என்றும், பொதுவெளியில் வெளியாகியுள்ள தகவல்களின் அடிப்படையில் எவ்வித வெளிப்புற அழுத்தமுமின்றி நியாயமான விசாரணை நடத்த வேண்டும் என்றும் மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது. மேலும், ஆளுங்கட்சி சட்டமன்ற உறுப்பினர் என்பதற்காக வழக்குப்பதிவு செய்யாமல் இருக்கக் கூடாது என்றும், பெண் மாவட்ட ஆட்சியரின் கண்ணியத்தைக் கேள்விக்குள்ளாக்கும் வகையில் சமூக வலைதளங்களில் பதிவிடுபவர்கள் மீதும் விசாரணை நடத்த வேண்டும் என்றும் மனுதாரர் கோரியுள்ளார்.

எம்எல்ஏ அருள் விக்னேஷ் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தும்படி தமிழக டிஜிபி மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு (SP) உத்தரவிட வேண்டும் என அந்த மனுவில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. முன்னதாக, தன் மீதான குற்றச்சாட்டுகளை எம்எல்ஏ அருள் விக்னேஷ் மறுத்திருந்த நிலையில், அதிமுக சார்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த மனு சென்னை உயர் நீதிமன்றத்தில் விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.