Posted in

125 நாள் வேலைத் திட்டத்தில் புதிய மாற்றம்: குறைகளைத் தீர்க்க மாவட்ட அளவில் குறைதீர்ப்பாளர் நியமனம்

கிராமப்புற மக்களுக்கான விக்சித் பாரத் – வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வாதார இயக்கத் (VB-G RAM G) திட்டத்தின் கீழ் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்யவும், தொழிலாளர்களின் புகார்களை விரைந்து தீர்க்கவும் மத்திய ஊரக வளர்ச்சி அமைச்சகம் புதிய வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. இந்தப் புதிய விதிகளின்படி, 125 நாள் வேலைத் திட்டப் பணியாளர்களின் உரிமைகளைப் பாதுகாக்க மாவட்ட அளவில் பிரத்யேகக் குறைதீர்ப்பாளர் (Ombudsperson) மற்றும் மேல்முறையீட்டு ஆணையம் ஆகியவை வலுப்படுத்தப்பட்டுள்ளன.

வேலை அட்டை வழங்குவதில் தாமதம், வேலைவாய்ப்பு மறுப்பு, ஊதியம் வழங்குவதில் தாமதம் மற்றும் அதற்கான இழப்பீடு, பணியிட வசதிகள் மற்றும் வருகைப் பதிவேடுகள் தொடர்பான புகார்களை மாவட்டக் குறைதீர்ப்பாளர்கள் விசாரிப்பார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பெண்கள் மற்றும் நலிவடைந்த பிரிவினர் மீதான பாகுபாடு மற்றும் துன்புறுத்தல் புகார்களும் இதில் விசாரிக்கப்படும் என்பதுடன், புகார்களை ஆன்லைனில் பதிவு செய்து கண்காணிக்கத் தனி டிஜிட்டல் தளமும் உருவாக்கப்பட்டுள்ளது.

ஊரக வளர்ச்சி, பொது நிர்வாகம், சட்டம் மற்றும் சமூகப் பணி ஆகிய துறைகளில் அனுபவம் வாய்ந்தவர்கள் குறைதீர்ப்பாளர்களாக நியமிக்கப்படுவதோடு, கள ஆய்வுகளின்போது புவிசார் குறியீட்டுடன் கூடிய (Geo-tagged) புகைப்படங்களைப் பதிவேற்றுவதும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. சமூகத் தணிக்கையை வலுப்படுத்தும் விதமாக, குறைதீர்ப்பாளர்கள் மாதத்திற்கு குறைந்தது மூன்று சமூகத் தணிக்கை பொதுக்கூட்டங்கள் அல்லது கிராம சபைகளில் பங்கேற்று மக்களின் குறைகளை நேரடியாகக் கேட்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கடந்த 2026 ஜூலை 1-ஆம் தேதி மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்திற்கு மாற்றாகக் கொண்டுவரப்பட்ட இந்தத் திட்டத்தில், தற்போது வெளியிடப்பட்டுள்ள வழிகாட்டுதல்கள் மூலம் நிர்வாகம் மேலும் பொறுப்புணர்வுடன் செயல்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் புதிய டிஜிட்டல் கண்காணிப்பு மற்றும் குறைதீர்ப்பு முறைகள் மூலம் கிராமப்புறத் தொழிலாளர்கள் தங்களது பிரச்சினைகளுக்கு எளிதில் தீர்வு காண வழிவகை செய்யப்பட்டுள்ளது.