நெருங்கிய உறவினர்கள் மற்றும் குடும்பத்தினர் முன்னிலையில் நடைபெற்ற இந்தத் திருமண விழாவில், பாரம்பரிய முறைப்படி அனிருத் காவ்யா மாறனுக்குத் தாலி கட்டினார். இந்த விழாவில் அனிருத்தின் பெற்றோர் ரவி ராகவேந்தர் – லக்ஷ்மி, கலாநிதி மாறன் – காவேரி மாறன் தம்பதியர், நடிகர் ரஜினிகாந்த் மற்றும் அவரது குடும்பத்தினர் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர். மேலும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் பிரமுகர்களும் நேரில் சென்று வாழ்த்து தெரிவித்தனர்.
இரு குடும்பத்தினருக்கும் இடையே நீண்டகாலமாக உள்ள நெருங்கிய நட்பு மற்றும் உறவின் அடிப்படையில் இந்தத் திருமணம் நிச்சயிக்கப்பட்டு நடைபெற்றுள்ளது. திருமண விழாவில் அனிருத் பாரம்பரிய உடையில் தோற்றமளித்த நிலையில், காவ்யா மாறன் இளஞ்சிவப்பு நிற லஹங்கா அணிந்திருந்தார்.
புதுமணத் தம்பதியருக்குத் திரையுலகப் பிரபலங்கள், விளையாட்டு வீரர்கள் மற்றும் ரசிகர்கள் சமூக வலைத்தளங்கள் வாயிலாகத் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.
கிரீஸ் நாட்டில் திருமணச் சடங்குகள் நிறைவடைந்துள்ள நிலையில், சென்னையில் திரையுலகினர் மற்றும் முக்கியப் பிரமுகர்களுக்காகப் பிரம்மாண்டமான திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.