கனடா நாட்டின் டொராண்டோ (Toronto) நகரில் சனிக்கிழமை இரவு நடைபெற்ற மிகப்பிரபலமான லத்தீன் கலாச்சார வீதித் திருவிழாவில் (Latin Street Festival) மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இரண்டு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். மேலும், நால்வர் படுகாயமடைந்து தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ‘சால்சா ஆன் செயின்ட் கிளேர்’ (Salsa on St. Clair) என்ற பெயரில் ஆண்டுதோறும் விமரிசையாகக் கொண்டாடப்படும் இந்த கலைத் திருவிழாவில், ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டிருந்த வேளையில் இந்த கோரத் தாக்குதல் அரங்கேறியுள்ளது. இந்தச் சம்பவம் டொராண்டோ நகர மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் பீதியையும் ஏற்படுத்தியுள்ளது.
டொராண்டோ காவல் துறையினருக்கு இரவு 8:12 மணியளவில் செயின்ட் கிளேர் அவென்யூ வெஸ்ட் மற்றும் ஆர்லிங்டன் அவென்யூ சந்திப்பில் துப்பாக்கிச் சூடு சத்தம் கேட்பதாக அவசரத் தகவல்கள் கிடைத்துள்ளன. சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற அதிரடிப்படை போலீசார், துப்பாக்கிக் குண்டுகள் பாய்ந்த நிலையில் ரத்த வெள்ளத்தில் கிடந்த 6 பேரைக் மீட்டனர். அவர்களில் இருவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் உறுதிப்படுத்தினர். துப்பாக்கிச் சூடு நடந்த உடனேயே அங்கு திரண்டிருந்த நூற்றுக்கணக்கான திருவிழா ஆர்வலர்கள் அலறியடித்துக் கொண்டு நாலாபுறமும் சிதறி ஓடிய காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.
முதற்கட்ட விசாரணையில், இரு தரப்பினருக்கு இடையே ஏற்பட்ட திடீர் மோதலின் காரணமாகவே இந்தத் துப்பாக்கிச் சண்டை (Exchange of Gunfire) வெடித்துள்ளதாகத் தெரியவந்துள்ளது. துப்பாக்கிச் சூடு நடத்திய கொலையாளிகள் தற்பொழுது சம்பவ இடத்திலிருந்து தப்பியோடி தலைமறைவாக உள்ளனர். ஆரம்பத்தில் இது ஒரு தொடர் துப்பாக்கிச் சூடு (Active Shooter Incident) அச்சுறுத்தலாகக் கருதப்பட்டதால், டொராண்டோ போலீசார் ஒட்டுமொத்தப் பகுதியையும் தங்களின் முழுக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்து, பொதுமக்கள் யாரும் அந்தப் பகுதிக்கு வர வேண்டாம் என்று அவசர எச்சரிக்கை விடுத்தனர். தற்பொழுது அப் பகுதி முழுமையாகப் போலீசாரின் பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.
தப்பியோடிய ஆயுதமேந்திய கொலையாளிகளைப் பிடிப்பதற்காக டொராண்டோ நகரக் காவல் துறை மற்றும் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் இணைந்து தற்பொழுது ஒரு பிரம்மாண்ட தேடுதல் வேட்டையை (Manhunt) முடுக்கிவிட்டுள்ளனர். சம்பவ இடத்திலிருந்து சில துப்பாக்கிகள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும், அங்கிருந்த கண்காணிப்பு கேமரா (CCTV) காட்சிகளை ஆய்வு செய்து வருவதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர். இந்த கோரச் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் விபரங்கள் மற்றும் குற்றவாளிகளின் பின்னணி குறித்த விரிவான விசாரணை தீவிரமாக நடைபெற்று வருகிறது.