தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளத் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வரும் அனுபமா பரமேஸ்வரன், தனது கடந்த காலக் காதல் உறவில் அனுபவித்த ‘டாக்ஸிக்’ (Toxic) அனுபவங்கள் மற்றும் மனரீதியான கொடுமைகள் குறித்து நேர்காணல் ஒன்றில் வெளிப்படையாகப் பேசியிருப்பது திரைத்துறை வட்டாரத்திலும் சோஷியல் மீடியாவிலும் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது. சுமார் இரண்டு ஆண்டுகளாகத் தான் கடுமையான மன அழுத்தத்திற்கும், கட்டுப்பாடுகளுக்கும் ஆளானதாக அவர் கூறியுள்ளது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தனது நேர்காணலில் பேசிய அனுபமா பரமேஸ்வரன், “நான் இரண்டு ஆண்டுகள் ஒரு நச்சுத் தன்மையுடைய காதலில் இருந்தேன். ஒரு நாள் அவர் ‘ரெமோ’ போல என் மீது அளவற்ற அன்பு காட்டுவார், மறுநாளே ‘அந்நியன்’ போல மாறி பயமுறுத்துவார்” எனத் தெரிவித்துள்ளார். மேலும், தனது ஆடை சுதந்திரத்தைக் கட்டுப்படுத்தியதுடன், தான் நடித்த படங்களின் விளம்பர நிகழ்வுகளுக்குக் கூட தன்னைச் செல்ல விடாமல் தடுத்ததாகத் தனது கசப்பான நினைவுகளைப் பகிர்ந்துள்ளார்.
அனுபமா யாரையும் நேரடியாகப் பெயர் குறிப்பிடாத போதிலும், மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவான ‘பைசன்’ திரைப்படத்தில் இணைந்து நடித்த நடிகர் துருவ் விக்ரமுடன் அவர் காதலில் இருந்ததாக ஏற்கனவே கிசுகிசுக்கப்பட்டது. இதனால், அனுபமாவின் இந்த ‘நார்சிசிஸ்டிக்’ (Narcissistic) குற்றச்சாட்டு துருவ் விக்ரமை நோக்கியே முன்வைக்கப்படுவதாக நெட்டிசன்கள் இணையத்தில் காரசாரமாக விவாதித்து வருகின்றனர்.
இந்தக் விவகாரம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் நிலையில், இதுகுறித்துப் பேசி மேலும் சர்ச்சையைக் கூட்ட விரும்பாமல் நடிகர் துருவ் விக்ரம் முற்றிலும் அமைதி காத்து வருகிறார். இரண்டு ஆண்டு கால வேதனையிலிருந்து மீண்டு வந்து தற்போது சுதந்திரமாக வாழத் தொடங்கியுள்ளதாக அனுபமா கூறியுள்ள நிலையில், திரைத்துறைப் பிரபலங்களும் ரசிகர்களும் அவருக்கு ஆதரவாகக் கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.