Posted in

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சிக்க வைப்பதாக மிரட்டி ரூ.40 லட்சம் பறிப்பு: காவல் ஆய்வாளரின் ஜாமீன் மனுத் தள்ளுபடி!

பகுஜன் சமாஜ் கட்சியின் முன்னாள் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் பெயர் சேர்ப்பதாக மிரட்டி தொழிலதிபர் ஒருவரிடம் ரூ.40 லட்சம் பணம் பறித்த வழக்கில் கைதான காவல் ஆய்வாளர் முகமது புஹாரி உள்ளிட்ட இருவரின் ஜாமீன் மனுக்களை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. காவல் துறையினரே இத்தகைய குற்றச்செயலில் ஈடுபட்டிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையைச் சேர்ந்த அகில் என்ற தொழிலதிபரைத் தொடர்புகொண்ட பரங்கிமலை காவல் நிலைய ஆய்வாளர் முகமது புஹாரி மற்றும் பிரண்ட்ஸ் ஆஃப் போலீஸ் அமைப்பைச் சேர்ந்த சீனிவாசன் ஆகியோர், ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கின் விசாரணையில் அவரைச் சிக்க வைக்கப் போவதாக மிரட்டியுள்ளனர். அந்த வழக்கிலிருந்து விடுவிக்க வேண்டுமானால் பெரும் தொகை தர வேண்டும் என வற்புறுத்தி, அவரிடமிருந்து ரூ.40 லட்சத்தை வசூலித்ததாகக் கூறப்படுகிறது.
இது குறித்துப் பாதிக்கப்பட்ட தொழிலதிபர் யானைகவுனி காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் விசாரணை நடத்திய காவல்துறையினர், கடந்த ஆகஸ்ட் 3-ஆம் தேதி ஆய்வாளர் முகமது புஹாரி மற்றும் சீனிவாசனை அதிரடியாகக் கைது செய்து சிறையில் அடைத்தனர். இதனிடையே, தாங்கள் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளிப்பதாகவும், ஏற்கனவே செல்போன்கள் மற்றும் மின்னணுச் சான்றுகள் கைப்பற்றப்பட்டு விட்டதால் ஜாமீன் வழங் வேண்டும் என்றும் கூறி அவர்கள் முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தனர்.
இந்த மனு முதன்மை அமர்வு நீதிபதி P. கார்த்திகேயன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசுத் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், மனுதாரர் காவல் துறையில் ஆய்வாளராகப் பணியாற்றி வந்தவர் என்பதால் ஜாமீன் வழங்கினால் சாட்சிகளைக் கலைக்க வாய்ப்புள்ளது என்றும், விசாரணை ஆரம்பக் கட்டத்தில் உள்ளதாகவும் கூறி கடும் எதிர்ப்பு தெரிவித்தார். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, குற்றச்சாட்டின் தன்மையைக் கருத்தில் கொண்டு காவல் ஆய்வாளர் உள்ளிட்ட இருவரின் ஜாமீன் மனுக்களையும் தள்ளுபடி செய்து அதிரடி உத்தரவிட்டார்.