Posted in

ஆஸ்திரேலிய காட்டில் வழிதவறி மாயமான 17 வயது இளைஞர் 6 நாட்களுக்குப் பின் மீட்பு

ஆஸ்திரேலியாவில் முகாமிடச் சென்றபோது அடர்ந்த காட்டில் வழிதவறி மாயமான 17 வயது இளைஞர், தீவிர தேடுதலுக்குப் பின் 6 நாட்களுக்குப் பிறகு உயிருடன் மீட்கப்பட்டார்.

ஆஸ்திரேலியாவில் உள்ள மெல்பர்ன் நகருக்கு அருகில் உள்ள அடர்ந்த வனப்பகுதியில், முகாமிடச் சென்ற 17 வயதுடைய வில்லியம் என்ற இளைஞர் கடந்த வெள்ளிக்கிழமை அன்று திடீரெனக் காணாமல் போனார். ஆட்டிசம் பாதிப்பு கொண்ட அந்த இளைஞர், குடும்பத்தினருடன் சுற்றுலா சென்றபோது வழிதவறி காட்டில் சிக்கிக்கொண்டது தெரியவந்துள்ளது. இவரைக் கண்டுபிடிக்கக் காவல்துறையினர் மற்றும் மீட்புப் படையினர் இணைந்து தீவிரமான தேடுதல் வேட்டையை மேற்கொண்டனர்.

காட்டில் காணாமல்போன இளைஞரைத் தேடும் பணியில் ஹெலிகாப்டர்கள், மோப்ப நாய்கள் மற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட அவசரகால மீட்புப் பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டனர். குளிரான சூழல் நிலவிய அந்தப் பகுதியில், வில்லியம் ஒரே இடத்தில் தங்கி மீட்புக்காகக் காத்திருந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ரோந்துப் பணியில் ஈடுபட்ட ஹெலிகாப்டர் மூலம் அவர் இருக்கும் இடம் கண்டறியப்பட்டு, பாதுகாப்பான முறையில் மீட்கப்பட்டார்.

மீட்புக் குழுவினரைக் கண்டதும் அவர் மகிழ்ச்சியுடன் சைகை காட்டியதாகவும், பின்னர் அவர் கயிற்றின் மூலம் ஹெலிகாப்டருக்கு மேலே தூக்கிச் செல்லப்பட்டு மீட்கப்பட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். பல நாட்கள் உணவு மற்றும் பாதுகாப்புக்மின்றி காட்டில் தவித்த போதிலும், அவர் நல்ல உடல் நலத்துடன் மீட்கப்பட்டிருப்பது அவரது குடும்பத்தினருக்குப் பெரும் நிம்மதியை அளித்துள்ளது. தனது மகன் உயிருடன் திரும்பியது மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாக அவரது தாயார் ஊடகங்களிடம் தெரிவித்தார்.

தற்போது வில்லியம் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு, அங்கு மருத்துவர்களின் தொடர் கண்காணிப்பில் உள்ளார். கடுமையான சவால்களைச் சமாளித்து காட்டுக்குள் தனித்து வாழ்ந்து மீட்கப்பட்டுள்ள இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பேசும் பொருளாகியுள்ளது. உணவு மற்றும் நீரின்றி இவ்வளவு நாட்கள் அவர் எவ்வாறு தாக்குப்பிடித்தார் என்பது குறித்துக் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.