கனடாவில் மிரட்டிப் பணம் பறித்தல் மற்றும் துப்பாக்கிச் சூடு சம்பவங்களில் ஈடுபட்டு வரும் லாரன்ஸ் பிஷ்னோய் கும்பலின் ‘பவேஜா’ (Baweja) என்ற புதிய துணைக் குழுவைச் சேர்ந்தவர்கள் மீது, பழிவாங்கும் நோக்கில் ஆயுதத் தாக்குதல் நடத்தப்பட்ட விவரங்கள் தற்போது வெளியாகியுள்ளன. கனடாவின் குடியேற்றம் மற்றும் அகதிகள் வாரிய (IRB) ஆவணங்கள் மூலம், ஆல்பர்ட்டா மற்றும் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணங்களில் இந்தக் குழுவின் செயல்பாடுகள் குறித்து சிபிசி செய்தி நிறுவனம் (CBC News) வெளியிட்டுள்ள அறிக்கையில் இத்தகவல்கள் இடம்பெற்றுள்ளன.
கடந்த 2025 அக்டோபர் மாதம் கல்கரி (Calgary) நகரில் உள்ள கல்லூரி வாகன நிறுத்துமிடத்தில் காரில் தூங்கிக் கொண்டிருந்த இளைஞர்கள் மீது, முகமூடி அணிந்து வேனில் வந்த 8 முதல் 9 பேர் கொண்ட கும்பல் மிளகுப் பொடி தெளிப்பு (Pepper spray), வாள் மற்றும் பேஸ்பால் மட்டைகளால் தாக்குதல் நடத்தியுள்ளது. இந்தத் தாக்குதலுக்கு உள்ளான கவான்மீத் சிங் (Kawanmeet Singh) என்பவர், பிஷ்னோய் கும்பலுடன் தொடர்புடைய பவேஜா குழுவின் தலைவராகச் செயல்பட்டு, கல்கரி மற்றும் சர்ரே (Surrey) பகுதிகளில் தொழிலதிபர்களை மிரட்டிப் பணம் பறித்தல் மற்றும் துப்பாக்கிச் சூடு நடத்துதல் போன்ற குற்றங்களில் ஈடுபட்டதாக அரசுத் தரப்பு ஆவணங்கள் தெரிவிக்கின்றன.
மாணவர் விசாவில் கனடா வந்த இளைஞர்களைக் கொண்டு செயல்படும் இந்தக் குழு, ஆயுதங்களுடன் சமூக வலைதளங்களில் பதிவிட்டு காவல்துறைக்குச் சவால் விடும் வகையில் செயல்பட்டதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. கல்கரியில் உள்ள டயர் கடை உரிமையாளர் ஒருவரிடம் 7,00,000 டாலர்கள் கேட்டு மிரட்டியது உட்பட பல்வேறு துப்பாக்கிச் சூடு சம்பவங்களில் பயன்படுத்தப்பட்ட துப்பாக்கிகள், சர்ரேயில் உள்ள ‘கேப்ஸ் கஃபே’ (Kap’s Cafe) மீதான தாக்குதலிலும் பயன்படுத்தப்பட்டது தடயவியல் சோதனையில் உறுதியாகியுள்ளது.
தற்போதைய நிலவரப்படி, இந்தக் குழுவைச் சேர்ந்த பலர் கனடாவிலிருந்து நாடு கடத்தப்பட்டுள்ள நிலையில், பிஷ்னோய் கும்பலின் பிற பிரிவுகளான ‘ஹூட் 420’ (Hood 420) உள்ளிட்ட குழுக்களின் செயல்பாடுகளையும் கனடா பாதுகாப்பு அமைப்புகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றன.