கிரேக்க தீவுகளில் காட்டுத்தீ மிக வேகமாகப் பரவி வரும் நிலையில், கடற்கரை வரை சூழ்ந்த நெருப்பிலிருந்து தப்பிக்க பிரித்தானிய சுற்றுலாப் பயணிகள் படகுகள் மூலம் அவசரமாக வெளியேற்றப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இரண்டாம் உலகப் போரின் போது வரலாற்றுச் சிறப்புமிக்க ‘டன்கிர்க்’ (Dunkirk) பகுதியில் படகுகள் மூலம் வீரர்கள் மீட்கப்பட்ட சம்பவத்தை நினைவூட்டும் வகையில் இந்த மீட்பு நடவடிக்கை அமைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.
ரோட்ஸ் மற்றும் க்ரீட் உள்ளிட்ட பிரபல சுற்றுலா தீவுகளில் கோடைக்கால விடுமுறையைக் கழிக்க ஆயிரக்கணக்கான பிரித்தானிய பயணிகள் குவிந்திருந்தனர். இந்நிலையிலேயே, பலத்த காற்றினால் கட்டுக்கடங்காமல் பரவிய காட்டுத்தீ, சுற்றுலா விடுதிகள் மற்றும் கடற்கரை கிராமங்களை நோக்கி வேகமாக முன்னேறியது. நிலப்பரப்பு வழியிலான முக்கிய பாதைகள் புகை மற்றும் தீயினால் துண்டிக்கப்பட்டதால், வேறு வழியின்றி மக்கள் கடற்கரைகளில் தஞ்சம் அடைந்தனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்த கடலோரக் காவல் படை, தனியார் படகுகள், மீன்பிடிப் படகுகள் மற்றும் படக உரிமையாளர்கள் ஒன்றிணைந்து மீட்புப் பணியில் ஈடுபட்டனர். கடற்கரையில் திரண்டிருந்த நூற்றுக்கணக்கான சுற்றுலாப் பயணிகளைச் சிறு படகுகள் மூலம் பாதுகாப்பான பெரிய கப்பல்களுக்கும், அண்டை கடலோரப் பகுதிகளுக்கும் அழைத்துச் சென்றனர். உயிரைக் கையிப்பிடித்துக் கொண்டு கடல் வழியே தப்பியதாக மீட்கப்பட்ட பயணிகள் அச்சத்துடன் தெரிவித்தனர்.
கிரேக்க தீவுகளில் நிலவி வரும் கடும் வெப்ப அலை மற்றும் பலத்த காற்று காரணமாகத் தீயைக் கட்டுப்படுத்துவதில் தீயணைப்புப் படையினருக்குச் சிரமம் ஏற்பட்டுள்ளது. இதுவரை ஆயிரக்கணக்கானோர் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ள நிலையில், சுற்றுலாப் பயணிகளைத் தங்களது தாய்நாட்டிற்கு அழைத்து வர சிறப்பு விமானங்களும் இயக்கப்பட்டு வருகின்றன. இச்சம்பவம் ஐரோப்பிய சுற்றுலாத் தலங்களில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.