Posted in

சென்னை அரசு மருத்துவமனை நுழைவுவாயில் கான்கிரீட் இடிந்து விழுந்து விபத்து; தாய், மகள் படுகாயம்!

சென்னை அண்ணாசாலையில் உள்ள புகழ்பெற்ற ஓமந்தூரார் அரசு பன்நோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை (Omandurar Government Hospital) வளாகத்தில் இன்று ஒரு பயங்கர விபத்து அரங்கேறியுள்ளது. மருத்துவமனையின் முக்கிய நுழைவுவாயில் பகுதியில் உள்ள வளைவின் (Arch) மேல்தள கான்கிரீட் காரை திடீரென அசுர வேகத்தில் இடிந்து விழுந்தது. இந்தத் திடுக்கிடும் விபத்தில், அங்குச் சிகிச்சையில் அனுமதிக்கப்பட்டிருந்த தங்களது குடும்பப் பெரியவரைப் பார்ப்பதற்காக ஈரோட்டில் இருந்து வந்திருந்த தாய் மற்றும் அவரது 7 வயது மகள் ஆகிய இருவர் மீது கான்கிரீட் பாளங்கள் விழுந்து அவர்கள் படுகாயமடைந்தனர்.

சம்பவத்தின் பின்னணி குறித்துப் பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்கள் கண்ணீருடன் கூறுகையில், உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த தந்தையைக் காண்பதற்காக ஈரோட்டில் இருந்து அவரது மகளும், 7 வயதுப் பேத்தியும் முன்தினம் இரவு சென்னை வந்துள்ளனர். இன்று காலை மருத்துவமனை நுழைவுவாயில் அருகே டீ குடித்துவிட்டு உள்ளே நுழைந்தபோது, எதிர்பாராத விதமாக மேற்கூரை கான்கிரீட் பெயர்ந்து அவர்கள் தலையில் விழுந்துள்ளது. இதில் அந்தப் பெண்ணுக்குத் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு 9 தையல்கள் போடப்பட்டுள்ளதுடன், இடது கை எலும்பு உடைந்ததால் கையில் பிளேட் வைக்கப்பட்டு அவசரச் சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

விபத்தின் போது குழந்தைக்கு லேசான காயம் என்று கூறி, மருத்துவர்கள் ஐஸ் கட்டி வைக்கச் சொல்லி அனுப்பியுள்ளனர். ஆனால், சில மணி நேரங்களில் குழந்தையின் தலைப்பகுதி அசுர வேகத்தில் வீங்கியதால், பதறிய உறவினர்கள் மீண்டும் மருத்துவரிடம் காட்டி ஸ்கேன் எடுத்துப் பார்த்துள்ளனர். அந்த ஸ்கேன் அறிக்கையில், குழந்தையின் மூளையில உள்்காயமாகி ரத்தக்கசிவு (Brain Internal Bleeding) ஏற்பட்டிருப்பது கண்டறியப்பட்டது. இதனால் அதிர்ச்சியடைந்த மருத்துவர்கள், ஓமந்தூரார் மருத்துவமனையில் நரம்பியல் (Neurology) சிறப்புப் பிரிவு இல்லாததால், குழந்தையை உடனடியாக சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு (RGGGH) அவசர அவசரமாக அனுப்பி வைத்தனர்.

நோயாளிக்கு ஆறுதல் கூற வந்தவர்கள் தற்போது தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள இந்த அதிர்ச்சிச் சம்பவம், அரசு மருத்துவமனைக்கு வரும் பொதுமக்களின் பாதுகாப்பைக் கேள்விக்குறியாக்கியுள்ளது. பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் உரிய ரிப்போர்ட்டுகள் தங்களுக்குத் தரப்படவில்லை என்றும், ஆம்புலன்ஸ் வர நீண்ட நேர தாமதமானதாகவும் குற்றம் சாட்டியுள்ளனர். இந்த விபத்து குறித்துத் தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்த பொதுப்பணித்துறை அதிகாரிகள் மற்றும் போலீசார், சேதமடைந்த கட்டிடப் பகுதியை ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.