அமெரிக்காவின் டென்னசி மாநிலத்தில் மரண தண்டனை விதிக்கப்பட்ட கிறிஸ்டா பைக் (Christa Pike) என்பவருக்கு கடந்த செப்டம்பர் 30-ஆம் தேதி ஊசி மூலம் மரண தண்டனை நிறைவேற்ற முயன்றபோது அது தோல்வியில் முடிந்தது. இந்தச் சம்பவத்திற்குப் பிறகு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைக்குப் பின் குணமடைந்து சிறை மருத்துவப் பிரிவுக்கு மாற்றப்பட்ட அவர், தற்போது வழக்கறிஞர்கள் மூலமாகத் தனது முதல் பகிரங்க அறிக்கையை வெளியிட்டுள்ளார். அதில், மருத்துவமனை கட்டிலில் விழித்தெழுந்ததில் இருந்து உடலிலும் மனதிலும் இடைவிடாத கடுமையான வலி இருந்து வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
தனது வழக்கறிஞர்கள் குழு மூலம் வெளியிடப்பட்டுள்ள அந்த அறிக்கையில், அமைதியான முறையில் உயிரை துறக்கவே தான் தயாராகச் சென்றதாகக் கிறிஸ்டா பைக் தெரிவித்துள்ளார். ஆனால் ஊசி போடும் போது ஏற்பட்ட சிரமங்களால் குழப்பத்துடனும் வலியுடனும் மருத்துவமனையில் விழித்தெழுந்ததாகவும், தனது உடலும் தொண்டையும் கைகளும் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். மேலும், தான் ஏன் அந்த இரவில் உயிர் பிழைத்தேன் என்பது தெரியவில்லை என்றும், ஒவ்வொரு நாளாக மெதுவாகக் குணமடைய முயன்று வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மரண தண்டனை முயற்சியின் போது ஏற்பட்ட தவறுகள் தொடர்பாக டென்னசி மாநிலச் சிறைத்துறை தலைவர் ராஜினாமா செய்த நிலையில், கிறிஸ்டா பைக்கின் மரண தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைக்க வேண்டும் என அவரது வழக்கறிஞர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். எனினும், நீதிமன்ற உத்தரவுகள் அடிப்படையில் மட்டுமே தண்டனை மாற்றம் குறித்து தீர்மானிக்க முடியும் என அம்மாநில ஆளுநர் பில் லீ சுட்டிக்காட்டியுள்ளார்.
தற்போது கிறிஸ்டா பைக் சிறை மருத்துவ மையத்தில் தொடர் மருத்துவக் கண்காணிப்பில் வைக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த மரண தண்டனை தோல்வி சம்பவம் தொடர்பாக அம்மாநில சட்டத்துறையும் புலனாய்வு அமைப்புகளும் விரிவான விசாரணையைத் தொடர்ந்து நடத்தி வருகின்றன.