தேசியத் தலைநகர் டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற 11-வது நிதி ஆயோக் ஆட்சிமன்றக் குழுக் கூட்டத்தில், தமிழக முதலமைச்சர் சி.ஜே.விஜய் முதன்முறையாகப் பங்கேற்றுத் தமிழகத்தின் வாழ்வாதார உரிமைகளுக்காக அதிரடியாகக் குரல் எழுப்பியுள்ளார். குடியரசுத் தலைவர் மாளிகை கலாச்சார மையத்தில் நடைபெற்ற இக்கூட்டத்தின் குழுப் புகைப்படத்தில், நாட்டின் முக்கியத் தலைவர்களுடன் முதல்வர் விஜய் முதல் வரிசையில் அமர்ந்திருந்தது தேசிய அளவில் பெரும் கவனம் ஈர்த்தது . கூட்டத்தில் பேசிய அவர், தவெக அரசு மத்திய அரசுடன் ஆக்கப்பூர்வமான ஒத்துழைப்புடன் செயல்படத் தயாராக இருக்கும் அதே வேளையில், மாநில உரிமைகளில் எவ்வித சமரசமும் செய்துகொள்ளாது என்பதைத் திட்டவட்டமாகப் பதிவு செய்தார்.
இக்கூட்டத்தில் முதல்வர் விஜய் முன்வைத்த மிக முக்கியக் கோரிக்கையாக நீட் (NEET) தேர்வு விலக்கு அமைந்தது. நீட் தேர்வு அறிமுகத்திற்குப் பின் கிராமப்புற மற்றும் ஏழை எளிய மாணவர்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதைச் சுட்டிக்காட்டிய அவர், தமிழக அரசு நீட் தேர்வை முற்றிலுமாக எதிர்க்கிறது என்றார். எனவே, மருத்துவப் படிப்புகளுக்கான (MBBS, BDS & AYUSH) மாநில ஒதுக்கீட்டு இடங்களை, பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு மதிப்பெண்களின் அடிப்படையில் மட்டுமே நிரப்புவதற்குத் தமிழ்நாடு அரசுக்கு உடனடியாக அனுமதி வழங்க வேண்டும் என்று பிரதமரிடம் நேரடியாக வலியுறுத்தினார்.
தொடர்ந்து கல்வி நிதிப் பகிர்வு குறித்துப் பேசிய முதலமைச்சர், தமிழ்நாட்டிற்கு மத்திய அரசிடமிருந்து வர வேண்டிய ரூ.3,284 கோடி கல்வித் துறைக்கான நிலுவை நிதியை எவ்விதத் தடையுமின்றி உடனே விடுவிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். மேலும், இந்த நிதியை விடுவிப்பதற்காகப் புதிய கல்விக் கொள்கையை (NEP) கட்டாயம் அமல்படுத்த வேண்டும் என்று கூறி மத்திய அரசு மாநிலங்களை எவ்விதத்திலும் நிர்பந்திக்கக் கூடாது என்றும் அவர் மேடையிலேயே மிக உறுதியாகக் குறிப்பிட்டார். அத்துடன், தமிழ் மொழியின் மாண்பைப் போற்றும் வகையில் உலகப் பொதுமறையான ‘திருக்குறளை’ தேசிய இலக்கியமாக அறிவிக்க வேண்டும் என்ற முக்கியக் கோரிக்கையையும் முன்வைத்தார்.
மாநில வளர்ச்சித் திட்டங்களைப் பட்டியலிட்ட விஜய், தமிழ்நாட்டின் இரண்டாவது எய்ம்ஸ் (AIIMS) மருத்துவமனையைக் கோயம்புத்தூரில் அமைக்க அனுமதிக்குமாறு கோரியதுடன், அதற்குத் தேவையான நிலத்தைத் தமிழக அரசு வழங்கும் என்றும் உறுதியளித்தார். மேலும், ஒகேனக்கல் 3-வது கட்டக் கூட்டுக்குடிநீர் திட்டத்திற்கு ரூ.2,283.40 கோடி நிதி ஒதுக்கீடு, சென்னை-குமரி அதிவேக ரயில் வழித்தடம், குலசேகரபட்டினம் விண்வெளி மையத்தைத் தேசிய மையமாக அறிவிப்பது மற்றும் இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களையும் அவர்களது படகுகளையும் உடனடியாக மீட்க தூதரக நடவடிக்கைகளை விரைவுபடுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட வாழ்வாதாரக் கோரிக்கைகளை அடுக்கடுக்காக முன்வைத்து டெல்லியில் தமிழகத்தின் குரலை உரக்கப் பதிவு செய்துள்ளார்.