Posted in

எப்ஸ்டீன் விவகாரத்தில் திருப்பம்: 11 ஆண்டுகளாக மாயமான மாடல் அழகியின் பின்னணி அம்பலம்!

பாலியல் கடத்தல் மற்றும் சிறார் பாலியல் வன்கொடுமை வழக்குகளில் சிக்கி, கடந்த 2019-ஆம் ஆண்டு சிறையிலேயே மர்மமான முறையில் உயிரிழந்த அமெரிக்கப் கோடீஸ்வரர் ஜெஃப்ரி எப்ஸ்டீனின் (Jeffrey Epstein) ரகசிய ஆவணங்கள் அண்மையில் அடுக்கடுக்காக வெளியாகி உலகையே உலுக்கி வருகின்றன. இந்தச் சூழலில், ஜெர்மனி நாட்டைச் சேர்ந்த பிரபல மாடல் அழகி ஒருவர் கடந்த 11 ஆண்டுகளாக மாயமாகி இருந்த நிலையில், அவரது பெயர் எப்ஸ்டீனின் ரகசியக் கோப்புகளில் இடம் பெற்றிருப்பது தற்போது உலக அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. “மிச்செல்” (Michele) என்று அடையாளம் காணப்பட்டுள்ள அந்தப் பெண், கடந்த 2015-ஆம் ஆண்டு தனது 22-வது வயதில் திடீரெனக் காணாமல் போனார்.

ஜெர்மனியின் புகழ்பெற்ற ‘டெர் ஸ்பீகல்’ (Der Spiegel) ஊடகம் வெளியிட்டுள்ள புலனாய்வு அறிக்கையின்படி, பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த மாடல் ஏஜென்ட் மற்றும் எப்ஸ்டீனின் முக்கிய ஏஜென்டாகச் செயல்பட்ட டேனியல் சியாத் (Daniel Siad) என்பவரின் குறுஞ்செய்திகள் மற்றும் மின்னஞ்சல்கள் மூலமாகவே இந்த அதிர்ச்சி உண்மை வெளிச்சத்திற்கு வந்துள்ளது. எப்ஸ்டீனுக்கு இளம்பெண்கள் மற்றும் மாடல்களைக் கடத்தி அனுப்பியதாகப் பிரான்ஸ் அதிகாரிகளால் தீவிர விசாரணை வளையத்தில் உள்ள சியாத், மிச்செல்லின் புகைப்படங்கள் மற்றும் உடல் அளவீடுகளை எப்ஸ்டீனுக்கு அனுப்பி வைத்துள்ளார்.

குறிப்பாக, எப்ஸ்டீனுக்கு அனுப்பிய ஒரு ரகசியக் குறுஞ்செய்தியில், மிச்செல்லின் படங்களைப் பகிர்ந்து “நிச்சயமாக இவளை உங்களுக்கு மிகவும் பிடிக்கும்” (You will love her) என்று சியாத் குறிப்பிட்டிருப்பது தற்போது ஆதாரத்துடன் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. துபாய் உள்ளிட்ட சர்வதேச நகரங்களில் மாடலிங் செய்து வந்த மிச்செல், இந்த மாபியா கும்பலின் வலையில் சிக்கியே மாயமாகியுள்ளார் என்பது தற்போது உறுதியாகியுள்ளது. எப்ஸ்டீனை மிச்செல் நேரில் சந்தித்ததற்கான நேரடி ஆதாரங்கள் இல்லை என்றாலும், எப்ஸ்டீனின் உதவியாளர்கள் இந்த விவகாரத்தை மூடிமறைக்க முயன்றுள்ளதாகக் குற்றம் சாட்டப்படுகிறது .

மகள் எப்ஸ்டீன் கோப்புகளில் சிக்கியதைத் தொடர்ந்து, மிச்செல்லின் தாய் கண்ணீருடன் தனது வேதனையைப் பகிர்ந்துள்ளார் . “என் மகள் உயிரோடு இருக்க வாய்ப்பில்லை என்றும், அவளுக்கு ஏதோ கொடூரமான அநீதி இழைக்கப்பட்டுள்ளது” என்றும் அவர் அச்சம் தெரிவித்துள்ளார். எப்ஸ்டீனின் கூட்டாளியான ஜான்-லுக் புருனல் சிறையில் தற்கொலை செய்துகொண்ட நிலையில், தற்போது டேனியல் சியாத்தின் குறுஞ்செய்திகள் சிக்கியுள்ளதால், மாயமான மாடல் அழகி மிச்செல்லுக்கு என்ன நேர்ந்தது என்பது குறித்து சர்வதேசப் போலீசார் மற்றும் எஃப்பிஐ (FBI) அதிகாரிகள் தங்களது விசாரணையை முடுக்கிவிட்டுள்ளனர்.