டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற 11-வது நிதி ஆயோக் (NITI Aayog) ஆட்சிமன்றக் குழுக் கூட்டத்தில், தமிழக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் முதன்முறையாகக் கலந்துகொண்டு தமிழ்நாட்டின் எதிர்கால வளர்ச்சிக்கான அதிரடி திட்டங்களை முன்வைத்தார். இக்கூட்டத்தில் பேசிய நிதி ஆயோக் துணைத் தலைவர் அசோக் குமார் லஹரி, முதலமைச்சர் விஜய்யின் பொருளாதாரத் தொலைநோக்கு பார்வையைப் பாராட்டிப் பேசினார். “இதுவரை திரைப்படங்களிலும் தொலைக்காட்சியிலும் மட்டுமே பார்த்த தலைவரை முதன்முறையாக நேரில் சந்தித்தேன். 2035-க்குள் தமிழ்நாட்டை 1.5 டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக மாற்ற வேண்டும் என்ற அவரது வளர்ச்சி இலக்கும் தெளிவான பார்வையும் என்னை ஆழமாக ஈர்த்துள்ளது” என்று அவர் வியப்புடன் தெரிவித்துள்ளார்.
முந்தைய திமுக ஆட்சியில் 2030-ஆம் ஆண்டுக்குள் 1 டிரில்லியன் டாலர் பொருளாதாரம் என்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்த நிலையில், புதிய முதலமைச்சர் விஜய் அந்த இலக்கை மேலும் உயர்த்தி 2035-36 நிதியாண்டுக்குள் 1.5 டிரில்லியன் டாலர் பொருளாதாரமாகத் தமிழ்நாட்டை உயர்த்தும் மெகா இலக்கை நிதி ஆயோக் அரங்கில் பிரகடனம் செய்துள்ளார். இளைஞர் நலன் மற்றும் திறன் மேம்பாடு, ஏழை எளிய மக்களின் வாழ்வாதார மேம்பாடு, மகளிர் மேம்பாடு மற்றும் விவசாயிகளின் முன்னேற்றம் ஆகிய நான்கு முக்கிய தூண்களை அடிப்படையாகக் கொண்டு இந்த வியூகம் வகுக்கப்பட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக ஆண்டுதோறும் 5 லட்சம் இளைஞர்களுக்கு உலகத்தரம் வாய்ந்த செயற்கை நுண்ணறிவு (AI), சைபர் பாதுகாப்பு, டீப் டெக்னாலஜி மற்றும் செமிகண்டக்டர் தொழில்நுட்பப் பயிற்சிகள் வழங்கப்படும் என்று அவர் உறுதியளித்துள்ளார்.
கூட்டுறவு கூட்டாட்சி மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியில் தமிழ்நாடு முழு நம்பிக்கை கொண்டுள்ளதாகத் தனது உரையில் குறிப்பிட்ட முதலமைச்சர் விஜய், இமாலய இலக்குகளை எட்ட மத்திய அரசின் நிதியுதவியையும் தொழில்நுட்ப ஆதரவையும் கோரினார். தமிழ்நாட்டின் இந்த வளர்ச்சி ஒட்டுமொத்த இந்தியாவின் பொருளாதார முன்னேற்றத்திலும் முக்கியப் பங்கு வகிக்கும் என்று அவர் எடுத்துரைத்தார். இந்த அதிரடி உரை மற்றும் இலக்குகள் தேசிய அளவில் பெரும் கவனத்தைப் பெற்றுள்ளதுடன், பிரதமர் மோடியுடனான ஆலோசனையின் போதும் இது குறித்து நிதி ஆயோக் குழுவினர் விரிவாக விவாதித்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
பொருளாதார இலக்குகள் மட்டுமன்றி, தமிழகத்தின் மிக முக்கியத் தேவைகள் குறித்தும் 10-க்கும் மேற்பட்ட அதிரடிக் கோரிக்கைகளை முதலமைச்சர் விஜய் இக்கூட்டத்தில் சமர்ப்பித்தார். குறிப்பாக, 12-ஆம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் மருத்துவ மாணவர் சேர்க்கை நடத்த வேண்டும், கோவையில் எய்ம்ஸ் (AIIMS) மருத்துவமனை அமைக்க வேண்டும், ஒருங்கிணைந்த கல்வித் திட்டத்தின் நிலுவைத் தொகையான ரூ.3,284 கோடியை நிபந்தனையின்றி விடுவிக்க வேண்டும் மற்றும் திருக்குறளைத் தேசிய இலக்கியமாக அறிவிக்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை அவர் முன்வைத்தார். மேலும், சென்னை – குமரி அதிவேக ரயில் வழித்தடம் மற்றும் பல்வேறு முக்கிய நெடுஞ்சாலைகளை 6 வழிச்சாலைகளாக மாற்றுவதற்கும் மத்திய அரசின் நிதியுதவியை அவர் வலியுறுத்தியுள்ளார்.