Posted in

வணக்கம் விஜய் அண்ணா: முதலமைச்சருக்கு பள்ளிச் சிறுவனின் உருக்கமான கோரிக்கை!

ராமநாதபுரம் மாவட்டம், கடலாடி தாலுகாவிற்கு உட்பட்ட மேலச்செல்வனூர் கிராமத்தைச் சேர்ந்த பள்ளிச் சிறுவன் ஒருவன், தமிழக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்க்கு விடுத்துள்ள உருக்கமான வீடியோ கோரிக்கை சமூக வலைத்தளங்களில் தற்பொழுது மிக வேகமாகப் பரவி வருகிறது. அந்த வீடியோவில், தங்களது கிராமத்திற்குப் போதிய பேருந்து வசதி இல்லாததால் பள்ளி மற்றும் கல்லூரிக்குச் செல்லும் மாணவ, மாணவிகள் தினமும் படும் அவஸ்தைகளை அந்தச் சிறுவன் மிகவும் எதார்த்தமாகவும், மழலை மாறாத குரலிலும் விவரித்துள்ளான்.

“வணக்கம் விஜய் அண்ணா… நாங்க மேலச்செல்வனூர் கிராமத்துல இருந்து பேசுறோம்” என்று தொடங்கும் அந்த வீடியோவில், காலையிலும் மாலையிலும் தங்களுக்குச் சரியான நேரத்திற்குப் பேருந்துகள் வருவதில்லை என அச்சிறுவன் வேதனை தெரிவித்துள்ளான். ஒரே ஒரு பேருந்து மட்டுமே வருவதால், அதில் பள்ளி மற்றும் கல்லூரிக்குச் செல்லும் மாணவ, மாணவிகள் அனைவரும் முண்டியடித்துக் கொண்டு, படிக்கட்டுகளில் தொங்கியபடி ஆபத்தான முறையில் பயணம் செய்ய வேண்டியுள்ளதாக அவன் முதலமைச்சரின் கவனத்திற்குப் கொண்டு சென்றுள்ளான்.

மேலும், கூடுதல் பேருந்து வசதி இல்லாத காரணத்தால் பல நேரங்களில் தங்களால் சரியான நேரத்திற்குப் பள்ளிக்குச் செல்ல முடிவதில்லை என்றும், இதனால் தங்களது படிப்பு பெரிதும் பாதிக்கப்படுவதாகவும் அந்தப் பள்ளி மாணவன் கவலையோடு தெரிவித்துள்ளான். “தயவுசெஞ்சு எங்க ஊருக்குக் கூடுதல் பேருந்து வசதி செஞ்சு கொடுங்க விஜய் அண்ணா” என அவன் விடுத்துள்ள பாசமான வேண்டுகோள், பார்ப்பவர்களின் நெஞ்சை நெகிழ வைப்பதுடன், அப்பகுதி மக்களின் நீண்ட நாள் போக்குவரத்துப் பிரச்சினையையும் வெளிச்சம்போட்டுக் காட்டியுள்ளது.

தமிழகத்தில் அண்மையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு முதலமைச்சர் விஜய் தலைமையிலான புதிய அரசு பொறுப்பேற்ற நிலையில், பல்வேறு மக்கள் நலத்திட்டங்கள் முடுக்கிவிடப்பட்டு வருகின்றன. குறிப்பாக, கிராமப்புற மாணவர்களின் கல்வி மற்றும் போக்குவரத்து வசதிகளுக்குப் புதிய அரசு முக்கியத்துவம் அளித்து வரும் சூழலில், ராமநாதபுரம் பள்ளிச் சிறுவனின் இந்த வீடியோ கோரிக்கைக்கு முதலமைச்சர் விஜய் உடனடியாகச் செவிசாய்த்து, சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு மேலச்செல்வனூர் கிராமத்திற்குப் புதிய பேருந்து வசதியை ஏற்படுத்திக் கொடுப்பாரா என்ற எதிர்பார்ப்பு தற்பொழுது பரவலாக எழுந்துள்ளது.