அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள ஆஸ்டின்-பெர்க்ஸ்ட்ரோம் சர்வதேச விமான நிலையத்திலிருந்து பஹாமாஸ் நாட்டிற்குப் புறப்பட்ட லியர்ஜெட் 60 (Learjet 60) ரகத் தனியார் விமானம், ஃப்ளோரிடாவின் பாம் பீச் பகுதியில் உள்ள கிரீன்ஏக்கர்ஸ் குடியிருப்புப் பகுதி அருகே விபத்துக்குள்ளானது. விமானத்தில் பயணித்த 9 பேரும் இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்ததாக அமெரிக்கப் போக்குவரத்துச் செயலாளர் ஷான் டஃபி (Sean Duffy) உறுதிப்படுத்தியுள்ளார். விமானம் கட்டுப்பாட்டை இழந்து செங்குத்தாகத் தரையில் மோதி வெடித்துச் சிதறியதில் அப்பகுதியில் பெரும் தீப்பிழம்பு ஏற்பட்டது.
இந்தச் சம்பவம் குறித்து ஊடகங்களிடம் பேசிய ஃப்ளோரிடா மாகாண ஆளுநர் ரான் டிசாண்டிஸ் (Ron DeSantis), விமானம் ஏவுகணை போல வேகமாகக் கீழே விழுந்து பெரிய பள்ளத்தை உருவாக்கியதாகத் தெரிவித்தார். அதிர்ஷ்டவசமாகத் தரையில் இருந்த பொதுமக்களுக்கு அசம்பாவிதம் ஏதும் ஏற்படவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த விபத்தினைத் தொடர்ந்து அப்பகுதியில் மின்சாரம் தற்காலிகமாகத் தடைபட்டதுடன், சாலைப் போக்குவரத்தும் காவல்துறையினரால் உடனடியாக முடக்கப்பட்டது.
தற்போது விபத்து ஏற்பட்ட இடத்தில் மீட்புப் பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில், விமானத்தின் பாகங்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன.
அமெரிக்கப் போக்குவரத்து பாதுகாப்பு வாரியம் (NTSB) மற்றும் கூட்டாட்சி விமானப் போக்குவரத்து நிர்வாகம் (FAA) ஆகியவை இணைந்து இந்த விபத்துக்கான துல்லியமான காரணங்கள் குறித்துத் தீவிர விசாரணை நடத்தி வருகின்றன.