கோவை வெள்ளலூர் பகுதியைச் சேர்ந்த அந்தோணி – சரண்யா தம்பதியின் 10 மாதக் குழந்தையான கனிஷ்கா ஸ்ரீக்கு, கடந்த அக்டோபர் 7ஆம் தேதி வெள்ளலூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் வழக்கமான தடுப்பூசி போடப்பட்டது. மறுநாள் குழந்தைக்குக் காய்ச்சல் ஏற்பட்டதைத் தொடர்ந்து செவிலியர் அறிவுறுத்தலின்படி மாத்திரை வழங்கப்பட்ட நிலையில், அக்டோபர் 9ஆம் தேதி குழந்தை திடீரென மயங்கி விழுந்துள்ளது.
ஆரம்ப சுகாதார நிலையத்தில் முதலுதவி அளிக்கப்பட்டு, பின்னர் 108 ஆம்புலன்ஸ் மூலம் கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டு தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டது. தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த குழந்தை கனிஷ்கா ஸ்ரீ, அக்டோபர் 14ஆம் தேதி அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது.
தடுப்பூசியால் தான் குழந்தை உயிரிழந்ததாகப் பெற்றோர் குற்றம் சாட்டியுள்ளதுடன், ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் அரசு மருத்துவமனையில் வழங்கப்பட்ட சிகிச்சை குறித்த முழுமையான விவரங்களை வழங்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.
அதேவேளையில், இந்த உயிரிழப்பிற்கும் தடுப்பூசிக்கும் எந்தவிதத் தொடர்பும் இல்லை என்றும், மூளைக்காய்ச்சல் அறிகுறி இருந்ததால் தீவிர சிகிச்சை அளித்தும் காப்பாற்ற முடியாமல் போனதாகவும் கோவை அரசு மருத்துவமனை டீன் கீதாஞ்சலி தெரிவித்துள்ளார்.
இச்சம்பவம் குறித்துத் துற ரீதியான விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், குழந்தையின் பெற்றோருக்குச் சிகிச்சை தொடர்பான அனைத்து ஆவணங்களையும் வழக்கத் தயார் என மருத்துவமனை நிர்வாகம் அறிவித்துள்ளது.