Posted in

ரசிகர் மன்றத்தை நற்பணி இயக்கமாக மாற்றிய நடிகர் தனுஷ்: அரசியலில் களமிறங்கத் திட்டமா?

தமிழ்நாட்டில் நடிகர் தனுஷ் தனது ரசிகர் மன்றங்களை ‘தனுஷ் நற்பணி இயக்கம்’ என அதிகாரப்பூர்வமாக மாற்றி அமைத்துள்ளதால், அவரது அரசியல் பிரவேசம் குறித்த எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

கோவையில் நடைபெற்ற மாநில நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில், அகில இந்திய தனுஷ் ரசிகர் மன்றத்தை நற்பணி இயக்கமாக மாற்றும் முடிவு எடுக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, இயக்கத்திற்காகத் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட புதிய லோகோ மற்றும் கொடியும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. தொகுதி வாரியாக நற்பணி இயக்கங்களைக் கட்டமைத்து, பொதுநலப் பணிகளைத் தீவிரப்படுத்துவதற்கான நடவடிக்கைகளில் தனுஷ் தரப்பு இறங்கியுள்ளது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் பலரும் அரசியல் பாதையைத் தேர்ந்தெடுத்து வரும் நிலையில், தனுஷின் இந்த அமைப்பு ரீதியான மாற்றம் அரசியல் வட்டாரத்தில் கவனம் பெற்றுள்ளது. ஏற்கனவே நடிகர் விஜய் தனது மக்கள் இயக்கத்தை அரசியல் கட்சியாக மாற்றிய பாணியிலேயே தனுஷும் தனது நற்பணி இயக்கத்தைக் கட்டமைத்து வருவதாக அரசியல் விமர்சகர்கள் குறிப்பிடுகின்றனர்.

இது குறித்த அதிகாரப்பூர்வமான அரசியல் அறிவிப்புகளை நடிகர் தனுஷ் விரைவில் வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.