Posted in

கோவையில் டாஸ்மாக் பாரில் கள்ள நோட்டு மாற்ற முயன்ற வாலிபர்கள் கைது: ரூ.1.86 லட்சம் பறிமுதல்

கோவை மாநகரப் பகுதியில் உள்ள மதுபானக் கூடத்திற்குச் சென்ற வாலிபர்கள் சிலர், தாங்கள் வாங்கிய மதுபானத்திற்குப் பணம் செலுத்துவதற்காக ஐநூறு ரூபாய் நோட்டுகளை வழங்கியுள்ளனர். அப்போது அந்த நோட்டுகள் போலியானவை என்பதை ஊழியர்கள் உடனடியாகக் கண்டறிந்துள்ளனர். இது குறித்துக் கடைவீதி காவல் நிலையத்திற்கு உடனடியாகத் தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் அங்கு நின்றிருந்த வாலிபர்களைச் சுற்றி வளைத்துப் பிடித்தனர்.

இதனைத் தொடர்ந்து அவர்களிடம் நடத்தப்பட்ட தீவிர சோதனையில், பொதுமக்கள் மத்தியில் புழக்கத்தில் விடுவதற்காக மறைத்து வைக்கப்பட்டு இருந்த 372 எண்ணிக்கையிலான ஐநூறு ரூபாய் கள்ள நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. பறிமுதல் செய்யப்பட்ட கள்ள நோட்டுகளின் மொத்த மதிப்பு 1 லட்சத்து 86 ஆயிரம் ரூபாய் ஆகும்.

இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய பல இளைஞர்களைக் கைது செய்துள்ள காவல்துறையினர், அவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.இந்தச் செயலில் தொடர்புடைய மேலும் சில நபர்களைக் காவல்துறையினர் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

கைது செய்யப்பட்டுள்ள வாலிபர்களுக்கு இந்த கள்ள நோட்டுகள் எங்கிருந்து கிடைத்தன மற்றும் இதன் பின்னணியில் பெரிய அளவிலான நெட்வொர்க் உள்ளதா என்பது குறித்துத் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.