Posted in

ஜெம் வீரமணி போக்சோ வழக்கு: முன்னாள் கமிஷனர் ஏடிஜிபி அருணிடம் சிறப்புப் புலனாய்வுக் குழு விசாரணை

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பரபரப்பை ஏற்படுத்திய ஜெம் வீரமணி மீதான போக்சோ வழக்கில் விசாரணை முடுக்கிவிடப்பட்டுள்ளது. இந்த வழக்கில் தொடர்புடைய முந்தைய புகார்கள் மற்றும் நடவடிக்கைகள் குறித்து விசாரிக்க அமைக்கப்பட்ட சிறப்புப் புலனாய்வுக் குழு (SIT), சென்னை மாநகர முன்னாள் காவல் ஆணையரும், ஏடிஜிபியுமான அருளிடம் துருவித் துருவி விசாரணை மேற்கொண்டது. இவருடன் ஐ.ஜி.க்கள் என். கண்ணன் மற்றும் ஏ. ராதிகா உள்ளிட்ட உயர் அதிகாரிகளிடமும் விசாரணைக் குழுவினர் வாக்குமூலங்களைப் பதிவு செய்துள்ளனர்.

முன்னதாக இந்த விவகாரத்தில் உரிய முறையில் புகார்கள் பெறப்பட்டும் உடனடி நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதனையடுத்து தமிழக அரசால் நியமிக்கப்பட்ட பெண் ஐ.பி.எஸ் அதிகாரிகளைக் கொண்ட சிறப்புப் புலனாய்வுக் குழுவினர், இந்த வழக்கில் காவல் துறையின் முந்தைய செயல்பாடுகள் குறித்து விரிவான விசாரணை நடத்தி வருகின்றனர். இவ்வழக்கில் தொடர்புடைய ஐபிஎஸ் அதிகாரிகள் ஏற்கனவே கட்டாய காத்திருப்புப் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

உயர் அதிகாரிகளிடம் நடத்தப்பட்டுள்ள இந்த விசாணை அரசியல் மற்றும் காவல் துறை வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதுடன், விசாரணையை மேலும் தீவிரப்படுத்தியுள்ளது.

இந்த வழக்கில் சேகரிக்கப்பட்ட சாட்சிகள் மற்றும் உயர் அதிகாரிகளிடம் பெறப்பட்ட விளக்கங்களின் அடிப்படையில் அடுத்தகட்ட சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.