Posted in

சிறையில் அடி வெளுத்த கைதிகள்: கோவை சிறுமி கொலை குற்றவாளி கார்த்திக் அடிபட்டு மருத்துவமனையில் அனுமதி!

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமியைப் பாலியல் வன்கொடுமை செய்து கொடூரமாகக் கொலை செய்த வழக்கில் கைதாகி, கோவை மத்தியச் சிறையில் அடைக்கப்பட்டிருந்த முதன்மைக் குற்றவாளி கார்த்திக் (33) மீது சக கைதிகள் ஆக்ரோஷத் தாக்குதல் நடத்தியுள்ளனர். சனிக்கிழமை மதிய உணவு இடைவேளையின் போது இந்த மோதல் அரங்கேறியுள்ளது. சிறை வளாகத்திற்குள் கார்த்திக்கைக் கண்ட பிற கைதிகள், தங்களின் தட்டுகள், கரண்டிகள் மற்றும் ஸ்பூன்களைக் கொண்டு அவரை நோக்கி வீசி எறிந்து, சரமாரியாக வெளுத்து வாங்கியதாகச் சிறைத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கடந்த வாரம் பாலாபாளையத்தைச் சேர்ந்த 5-ஆம் வகுப்பு படித்து வந்த சிறுமியை, சாக்லேட் வாங்கித் தருவதாகக் கூறி கார்த்திக் தனது இருசக்கர வாகனத்தில் கடத்திச் சென்று, தென்னந்தோப்பில் வைத்துப் பாலியல் வன்கொடுமை செய்து படுகொலை செய்தான். இச்சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில், கார்த்திக் மற்றும் அவனது கூட்டாளி மோகன் ஆகியோர் குண்டாஸ் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த நிலையில், சிறைக்குள் இருந்த பிற கைதிகளும் இக்கொடூரச் செயலால் ஆத்திரமடைந்து இத்தாக்குதலை நடத்தியுள்ளனர்.

சக கைதிகளின் இந்தத் திடீர் தாக்குதலால் நிலைதடுமாறிய குற்றவாளி கார்த்திக்கிற்கு, ஏற்கனவே உடைந்திருந்த கைகள் மற்றும் கால்களில் மீண்டும் பலத்த காயம் ஏற்பட்டு ரத்த வெள்ளத்தில் சரிந்தான். முன்னதாக, கடந்த மே 22 அன்று போலீசார் கார்த்திக்கை பிடிக்கச் சென்றபோது, அவன் முதல் மாடி கட்டிடத்திலிருந்து குதித்துத் தப்பிக்க முயன்றதில் அவனது வலது கையும், வலது காலும் முறிந்திருந்தன. தற்போது சிறைக்குள் நடந்த இந்தத் தாக்குதலில் அவனுக்கு மேலும் புதிய காயங்கள் ஏற்பட்டுள்ளன.

மோதல் வெடித்ததை அடுத்துச் சிறைத்துறை காவலர்கள் உடனடியாகத் தலையிட்டு நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர். பலத்த காயமடைந்த கார்த்திக், உடனடியாகச் சிறைத்துறை ஆம்புலன்ஸ் மூலம் கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு (CMCH) கொண்டு செல்லப்பட்டு தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளான். அசம்பாவிதங்களைத் தவிர்க்க மருத்துவமனை வளாகம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. பொதுமக்கள் மற்றும் கைதிகள் மத்தியிலும் இக்கொடூரக் குற்றவாளிக்கு எதிராக எழுந்துள்ள ஆத்திரம் கோவையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.