மனித மூளையை நேரடியாகத் தாக்கி உயிருக்கே ஆபத்தை விளைவிக்கக்கூடிய ‘கிளாடோஃபையலோஃபோரா பாண்டியானா’ (Cladophialophora bantiana) என்ற அரிதான பூஞ்சை தொற்று அமெரிக்காவில் கணிசமாக அதிகரித்து வருவதாக ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர். அமெரிக்க நோய்க் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் (CDC) மற்றும் வாஷிங்டன் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் இணைந்து வெளியிட்ட அறிக்கையின்படி, 2023-ஆம் ஆண்டுக்குப் பிறகு இந்த பூஞ்சை தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நான்கு மடங்கு உயர்ந்துள்ளமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
பொதுவாக மனிதர்களுக்கு ஏற்படும் பூஞ்சை தொற்றுகள் உடலின் பிற பாகங்களில் தொடங்கி பின்னரே மூளைக்கு பரவும் என்றாலும், இந்த வகை பூஞ்சை நேரடியாக மூளையைத் தாக்கி சீழ் கட்டிகளை (Brain Abscesses) உருவாக்குகிறது. வாஷிங்டன் பல்கலைக்கழக ஆய்வகத்தில் ஜனவரி 2009 முதல் ஜூலை 2026 வரை சேகரிக்கப்பட்ட மாதிரிகளில் 48 பேருக்கு இந்தத் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் 2024-ஆம் ஆண்டில் 8 வழக்குகளும், 2025-ஆம் ஆண்டில் 14 வழக்குகளும் பதிவாகியுள்ளன என ஆய்வறிக்கை விவரிக்கிறது.
இந்த பூஞ்சை மனித உடலுக்குள் எவ்வாறு நுழைகிறது அல்லது சூழலில் எங்கு வாழ்கிறது என்பது குறித்துத் தெளிவான தகவல்கள் இன்னும் கிடைக்கவில்லை என மருத்துவ நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். “நோாய் எதிர்ப்புச் சக்தி குறைவாக உள்ளவர்கள் மட்டுமன்றி, ஆரோக்கியமான உடலமைப்பு கொண்டவர்களையும் இந்தத் தொற்று தாக்குவது கவலையளிக்கிறது” என்று ஆய்வின் ஆசிரியர் ஜோசுவா லீபர்மேன் (Joshua Lieberman) தெரிவித்துள்ளார். மேலும், தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட போதிலும் இந்த தொற்றினால் பாதிக்கப்படுபவர்களில் இறப்பு விகிதம் 60 முதல் 70 சதவீதமாக உள்ளது.
தற்போது அமெரிக்காவின் கலிபோர்னியா, புளோரிடா, டெக்சாஸ் உட்பட 21 மாநிலங்களில் இதன் மாதிரிகள் கண்டறியப்பட்டுள்ளன. பரவல் தீவிரமடைந்து வருவதைத் தொடர்ந்து, நோய் பரவுவதற்கான காரணங்களைக் கண்டறியவும், இந்தத் தொற்றைக் முன்கூட்டியே கண்டறிந்து கண்காணிக்கவும் கூடுதல் கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு நோய்க் கட்டுப்பாடு மையம் வலியுறுத்தியுள்ளது.