Posted in

வாக்காளர் பட்டியல் விவகாரம்: ஜந்தர் மந்தர் நோக்கிய பேரணியில் ராகுல் காந்தி கைது!

வாக்காளர் சிறப்பு தீவிர திருத்த முறைகேடு (SIR) விவகாரத்தில் தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரின் ராஜினாமாவை வலியுறுத்தி, டெல்லி ஜந்தர் மந்தர் நோக்கி பேரணி செல்ல முயன்ற மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மற்றும் ‘இண்டியா’ கூட்டணி எம்.பி.க்களை டெல்லி காவல் துறையினர் கைது செய்தனர். காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கூட்டிய ஆலோசனை கூட்டத்தைத் தொடர்ந்து, தலைவர்கள் பேருந்துகள் மூலம் பேரணியாக புறப்பட்டபோது அசோகா சாலை மற்றும் ஜனபத் பகுதிகளில் தடுத்து நிறுத்தப்பட்டனர்.

தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பணி விலக வேண்டும் என்றும், தங்களை அமைதியான முறையில் போராடக்கூட அரசு அனுமதிக்கவில்லை என்றும் குற்றம் சாட்டிய ராகுல் காந்தி, வழக்குகளுக்கு தாம் பயப்படவில்லை எனத் தெரிவித்தார். இந்தப் பேரணியில் ராகுல் காந்தியுடன் பிரியங்கா காந்தி வத்ரா, திரிணாமுல் காங்கிரஸ் எம்பி டெரெக் ஓ பிரையன் மற்றும் பல எதிர்க்கட்சி எம்.பி.க்கள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டு வீதியில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

எதிர்க்கட்சிகளின் இந்த நடவடிக்கைக்கு பாஜக கடுமையாக கண்டனம் தெரிவித்து உள்ளது. தேர்தல் ஆணையம், நீதித்துறை போன்ற அரசியலமைப்பு நிறுவனங்களின் மீது காங்கிரஸ் கட்சி தொடர்ந்து தாக்குதல் நடத்தி நாட்டில் குழப்பத்தை ஏற்படுத்த முயல்வதாக பாஜக எம்பி தேஜஸ்வி சூர்யா குற்றம் சாட்டியுள்ளார். அதேவேளையில், காவல்துறையினர் மக்கள் பிரதிநிதிகளைக் கையாண்ட விதம் ஜனநாயகத்திற்கு எதிரானது என பிரியங்கா காந்தி சாடியுள்ளார்.

கைது செய்யப்பட்ட எதிர்க்கட்சித் தலைவர்கள் பேருந்துகளில் ஏற்றப்பட்டு பாதுகாப்பு காரணங்களுக்காக வெவ்வேறு இடங்களுக்குக் கொண்டு செல்லப்பட்டனர். தங்களது கோரிக்கைகள் நிறைவேறும் வரை தேர்தல் ஆணையத்திற்கு எதிரான இந்த அறப்போராட்டம் தொடர்ந்து நடைபெறும் என ‘இண்டியா’ கூட்டணி தலைவர்கள் அறிவித்துள்ளனர்.