திருப்பூர் மாவட்டம் தாராபுரம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் களம் தீவிரமடைந்துள்ள நிலையில், அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அங்கு தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். தாராபுரத்தில் போட்டியிடும் அ.தி.மு.க வேட்பாளர் பானுமதியை ஆதரித்து எடப்பாடி பழனிசாமி பிரசாரம் செய்தார். அப்போது பேசிய அவர், தமிழக முதலமைச்சரும் தவெக தலைவருமான விஜய்யின் நிர்வாகத் திறமை மற்றும் செயல்பாடுகள் குறித்து பல கேள்விகளை எழுப்பி கடுமையாக விமர்சித்துள்ளார்.
பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றிய எடப்பாடி பழனிசாமி, அ.தி.மு.க சார்பில் வெற்றி பெற்ற முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் வி.சத்யபாமாவை ராஜினாமா செய்ய வைத்து, தவெக சார்பில் வேட்பாளராகக் களமிறக்கியதைச் சுட்டிக்காட்டினார். “தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு பிரதிநிதியை ராஜினாமா செய்ய வைத்துத் தனது கட்சி வேட்பாளராகக் நிறுத்தியதன் பின்னணி என்ன” என்று அவர் கேள்வி எழுப்பினார். மேலும், 70 திரைப்படங்களில் நடித்த போதிலும் ஒரு தேசிய விருதைக் கூட வெல்ல முடியாத விஜய், அரசியல் களத்தில் என்ன சாதனையைச் செய்துவிட்டார் என்றும் அவர் வினவினார்.
தொடர்ந்து பேசிய அவர், மேகதாது அணை விவகாரத்தில் அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டி மத்திய அரசுக்கு முதலமைச்சர் விஜய் அழுத்தம் தர வேண்டும் என வலியுறுத்தினார். மேடைக்கு மேடை மக்கள் குடும்பத்தில் ஒருவனாக இருப்பேன் என்று வசனம் பேசுவதுடன் நின்றுவிடாமல், நிஜ வாழ்க்கையிலும் அதன்படி வாழ்ந்து காட்ட வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், டெங்கு காய்ச்சல் போன்ற மக்கள் சார்ந்த முக்கியப் பிரச்சினைகளில் இந்த அரசு போதிய கவனம் செலுத்தவில்லை என்றும் அவர் குற்றம் சாட்டினார்.
தாராபுரம் இடைத்தேர்தல் களத்தில் பிரதான கட்சிகளின் தலைவர்கள் நேரடியாக மோதி வருவதால் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. அ.தி.மு.க தொண்டர்களும் நிர்வாகிகளும் பிரசாரப் பணிகளை முடுக்கிவிட்டுள்ள நிலையில், எதிர்க்கட்சிகளின் இந்த விமர்சனங்களுக்குத் தமிழக வெற்றித் கழகத் தரப்பில் இருந்து பதிலடிகள் கொடுக்கப்பட்டு வருகின்றன.