மத்திய கிழக்கு பிராந்தியத்தில் ஈரான் உடனான மோதல் போக்கு நீடித்து வரும் சூழலில், அமெரிக்கா தனது இராணுவப் பலத்தை மேலும் அதிகரிக்கும் நடவடிக்கையில் இறங்கியுள்ளது. அமெரிக்கா தனது 3-வது விமானம் தாங்கி போர்க்கப்பலான ‘யுஎஸ்எஸ் தியோடோர் ரூஸ்வெல்ட்’ (USS Theodore Roosevelt) மற்றும் கூடுதல் கடற்படைப் பிரிவுகளை மத்திய கிழக்கிற்கு அனுப்புகிறது. இதன் மூலம் ஏறத்தாழ 9,000 முதல் 10,000 கூடுதல் அமெரிக்கப் படையினரும் மாலுமிகளும் அப்பகுதியில் புதிதாகக் களமிறக்கப்பட உள்ளனர்.
முன்னதாக சாண்டியாகோ துறைமுகத்தில் இருந்து புறப்பட்ட ‘யுஎஸ்எஸ் தியோடோர் ரூஸ்வெல்ட்’ போர்க்கப்பல் குழு, வரும் நவம்பர் மாத இறுதிக்குள் மத்திய கிழக்கு பிராந்தியத்தை சென்றடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே ‘யுஎஸ்எஸ் ஜார்ஜ் எச்.டபிள்யூ. புஷ்’ மற்றும் ‘யுஎஸ்எஸ் ஜார்ஜ் வாஷிங்டன்’ ஆகிய இரண்டு விமானம் தாங்கி போர்க்கப்பல்கள் அப்பகுதியில் நிலைநிறுத்தப்பட்டுள்ள நிலையில், தற்போது மேலும் ஒரு கப்பல் அனுப்பப்படுகிறது. அமெரிக்காவில் வரவிருக்கும் இடைத்தேர்தல்களுக்குப் பிறகு ஈரான் மீது மீண்டும் வான்வழித் தாக்குதல்களைத் தொடங்குவது குறித்து அதிபர் டொனால்ட் டிரம்ப் பரிசீலித்து வருவதாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்ததாக செய்திகள் கூறுகின்றன.
இந்த புதிய நகர்வு குறித்து கருத்து தெரிவித்துள்ள அமெரிக்க அதிகாரிகள், பிராந்தியத்தில் அமெரிக்கப் படைகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் சாத்தியமான அச்சுறுத்தல்களை எதிர்கொள்ளவுமே கூடுதல் படைகள் அனுப்பப்படுவதாகத் தெரிவித்துள்ளனர். இதற்கிடையே, அமெரிக்காவின் இந்த இராணுவ நடவடிக்கை காரணமாக சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை கணிசமாக உயர்ந்துள்ளதாக பொருளாதார நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். அதேநேரம், ஈரானுடன் செய்து கொள்ளப்படும் எந்தவொரு உடன்படிக்கைக்கும் பிறகும் கூட தமது இராணுவப் படைகளை உடனடியாகத் திரும்பப் பெறப் போவதில்லை என்ற நிலைப்பாட்டில் பென்டகன் உறுதியாக உள்ளதாகக் கூறப்படுகிறது.
தற்போது மத்திய கிழக்கு பிராந்தியத்தில் 50,000-க்கும் மேற்பட்ட அமெரிக்கப் படையினர் ஏற்கனவே முகாமமிட்டுள்ள நிலையில், புதிய படைகளின் வருகை அப்பகுதியில் மேலும் இராணுவ விழிப்புணர்வை அதிகரித்துள்ளது. புதிய போர்க்கப்பல்கள் மற்றும் மேலதிகப் படைகள் முழுமையாக நிலைநிறுத்தப்பட்ட பின்னரே, அதிபர் டிரம்பின் அடுத்தகட்ட இராணுவ நடவடிக்கைகள் குறித்தான அதிகாரப்பூர்வ முடிவுகள் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.