Posted in

எப்ஸ்டீன் கோப்புகளில் சிக்கிய பிரெஞ்சு மாடலிங் ஏஜென்ட் மர்ம மரணம்!

அமெரிக்கப் பெரும் பணக்காரரும் பாலியல் குற்றவாளியுமான மறைந்த ஜெஃப்ரி எப்ஸ்டீன் (Jeffrey Epstein) வழக்கில் வெளியிடப்பட்ட அதிகாரப்பூர்வ ஆவணங்களில் 2,000க்கும் மேற்பட்ட இடங்களில் பெயர் இடம்பெற்றிருந்த பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த மாடலிங் ஏஜென்ட் டேனியல் சியாட் (Daniel Siad, 69) பாரிஸ் நகரிலுள்ள தனது வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பிரெஞ்சு அதிகாரிகளின் இந்தத் திடீர் அறிவிப்பு சர்வதேச அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்க நீதித் துறை வெளியிட்ட எப்ஸ்டீன் ஆவணங்களின்படி, டேனியல் சியாட் பல ஆண்டுகளாக ஐரோப்பிய நாடுகளிலிருந்து இளம் பெண்களுக்கு மாடலிங் வாய்ப்பு தருவதாகக் கூறி எப்ஸ்டீனுக்கு அறிமுகம் செய்து வைத்த இடைத்தரகராகச் செயல்பட்டுள்ளார். சுமார் ஐந்துக்கும் மேற்பட்ட பெண்கள் சியாட் மீது பாலியல் வன்கொடுமை மற்றும் மனித கடத்தல் புகார்களை அளித்திருந்த நிலையில், பிரெஞ்சு காவல் துறையினர் அவர் மீது தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.

பாரிஸின் கொலம்பஸ் (Colombes) பகுதியில் உள்ள அவரது வீட்டில் சியாட் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டதைத் தொடர்ந்து, அவரது உடலைக் கைப்பற்றிய நந்தேர் (Nanterre) நகர அரசு வழக்கறிஞர் அலுவலகம், மரணத்திற்கான உண்மையான காரணத்தைக் கண்டறிய உடற்கூறாய்வுக்கு (Autopsy) உத்தரவிட்டுள்ளது. இருப்பினும், சியாட் மாரடைப்பு காரணமாகவே உயிரிழந்ததாக அவரது வழக்கறிஞர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, எப்ஸ்டீன் விவகாரத்தில் கைதாகி சிறையில் இருந்த மற்றொரு முன்னணி பிரெஞ்சு மாடலிங் முகவர் ஜான்-லூக் புரூனெல் (Jean-Luc Brunel) 2022-இல் சிறையிலேயே தற்கொலை செய்துகொண்டார். தற்போது அவருக்கு அடுத்து எப்ஸ்டீனின் முக்கிய கூட்டாளியான டேனியல் சியாட்டும் விசாரணை வளையத்திற்குள் வரும் முன்பே உயிரிழந்துள்ளது, பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நீதி கிடைப்பதில் பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளதாகச் சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.