பிரிட்டன், பெல்ஜியம், அயர்லாந்து மற்றும் ஸ்வீடன் உள்ளிட்ட பல ஐரோப்பிய நாடுகளில் இயங்கி வரும் சூப்பர் மார்க்கெட்களின் ‘பிரீசர்’ (Freezer) மற்றும் குளிரூட்டும் கணினி அமைப்புகள் இணையத் தாக்குதல் மூலம் முடக்கப்பட்டன. இதனால் குளிரூட்டிகளின் வெப்பநிலை 50 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கப்பட்டு, கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பிலான உறைவிக்கப்பட்ட உணவுப் பொருட்கள் வீணாகின. இதனைத் தொடர்ந்து அடுத்த 24 மணி நேரத்திற்குள் ஐரோப்பிய வான்வெளியில் பறந்த பல பயணிகள் விமானங்களுக்கும் போலியான வெடிகுண்டு மிரட்டல்கள் விடுக்கப்பட்டு அவசரமாகத் தரையிறக்கப்பட்டன.
இந்த இணையத் தாக்குதல்கள் மற்றும் வான்வெளி அச்சுறுத்தல்கள் ஐரோப்பாவின் உணவு விநியோகம் மற்றும் உள்கட்டமைப்பைச் சீர்குலைக்கும் நோக்கில் திட்டமிட்டு நடத்தப்பட்டுள்ளதாக ஐரோப்பிய ஒன்றியப் பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர். ஹேக்கர்கள் இதில் நிதி ஆதாயம் எதையும் எதிர்பார்க்காததால், இது தனிநபர் குற்றவாளிகளின் வேலையல்ல என்றும், ரஷ்யாவின் ஆதரவு பெற்ற அமைப்புகளே இதன் பின்னணியில் செயல்பட்டிருக்கக் கூடும் என்றும் பிரிட்டன் தேசிய இணையப் பாதுகாப்பு மையம் மற்றும் உளவுத்துறை அதிகாரிகள் சந்தேகம் தெரிவித்துள்ளனர். இருப்பினும், இந்த குற்றச்சாட்டுகளை ரஷ்ய அரசு வழக்கம் போல் திட்டவட்டமாக மறுத்துள்ளது.
தற்போது இங்கிலாந்து, பிரான்ஸ் மற்றும் ஐரோப்பிய நாடுகளின் புலனாய்வு அமைப்புகள், அமெரிக்க குற்றவியல் விசாரணைப் பிரிவுடன் இணைந்து இந்த இணையக் குற்றங்கள் குறித்துத் தீவிர விசாரணை நடத்தி வருகின்றன.
பொதுமக்கள் அத்தியாவசிய உணவு மற்றும் குடிநீரைச் சேமித்து வைத்து விழிப்புடன் இருக்குமாறு ஐரோப்பிய நாடுகளின் பாதுகாப்பு அமைப்புகள் அறிவுறுத்தியுள்ளன.