Posted in

ரஷ்யா சில வாரங்களில் தாக்கும் என உளவுத்துறை எச்சரிக்கை; ஐரோப்பிய நாடுகள் அவசர வெளியேற்ற திட்டம்!

ரஷ்யா இன்னும் சில வாரங்களுக்குள் ஐரோப்பிய நாடுகள் மீது திடீர் தாக்குதலைத் தொடுக்கக்கூடும் எனப் புலனாய்வு அமைப்புகள் தீவிர எச்சரிக்கை விடுத்துள்ளதைத் தொடர்ந்து, நேட்டோ (NATO) அமைப்பின் மிக பலவீனமான முனையாகக் கருதப்படும் பகுதியில் இருந்து பொதுமக்களை அவசரமாக வெளியேற்றுவதற்கான ரகசியத் திட்டங்களை ஐரோப்பியக் நட்பு நாடுகள் தீவிரமாக வகுத்து வருகின்றன.

போலந்து மற்றும் லிதுவேனியா நாடுகளுக்கு இடையே அமைந்துள்ள ‘சுவால்கி கேப்’ (Suwalki Gap) எனப்படும் குறுகிய நிலப்பகுதியே நேட்டோ அமைப்பின் ‘அகிலெஸ் ஹீல்’ (Achilles heel) அல்லது மிக பலவீனமான பகுதியாக வல்லுநர்களால் பார்க்கப்படுகிறது. ரஷ்யாவின் கலினின்கிராட் பிராந்தியத்தையும் அதன் நட்பு நாடான பெலாரஸையும் இணைக்கும் இந்த மூலோபாயப் பாதையை ரஷ்யப் படைகள் கைப்பற்றினால், பால்டிக் நாடுகளான எஸ்டோனியா, லேட்வியா மற்றும் லிதுவேனியா ஆகியவை எஞ்சிய ஐரோப்பாவில் இருந்து முற்றிலும் துண்டிக்கப்படும் அபாயம் உள்ளது.

மேற்கத்திய உளவுத்துறை அமைப்புகள் வெளியிட்டுள்ள புதிய அறிக்கையில், உக்ரைன் போருக்கு மத்தியிலும் ரஷ்யா தனது எல்லைகளில் படைகளையும் ஏவுகணை அமைப்புகளையும் குவித்து வருவதாகச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. எதிர்பாராத வகையில் தாக்குதல் நடத்தப்பட்டால், பாப்ளிக் பிராந்தியத்தில் உள்ள பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் மற்றும் ராணுவத்தினரை பாதுகாப்பான தெற்கு மற்றும் மேற்கு ஐரோப்பிய பகுதிகளுக்கு வெளியேற்றுவதற்கான இரயில் மற்றும் சாலை வழிப் பாதைகள் (Military Corridor) தற்போது அவசரமாகத் தயார் செய்யப்பட்டு வருகின்றன.

இந்த அவசர வெளியேற்றத் திட்டங்கள் மற்றும் நேட்டோவின் ‘ஆர்டிகிள் 5’ கூட்டுப் பாதுகாப்பு நடைமுறைகள் குறித்து விவாதிக்க ஐரோப்பிய ராணுவத் தலைவர்கள் அவசர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர். ரஷ்யாவின் சாத்தியமான தாக்குதலைத் தடுக்கும் பொருட்டு, கிழக்கு ஐரோப்பிய எல்லைப் பகுதிகளில் கூடுதல் நேட்டோ துருப்புகளும் வான் பாதுகாப்பு அமைப்புகளும் குவிக்கப்பட்டு வருவதால் ஐரோப்பியக் கண்டத்தில் உச்சக்கட்ட போர்ப் பதற்றம் நிலவி வருகிறது.