அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பின் பெய்ஜிங் பயணத்தின் போது எடுக்கப்பட்ட ஒரு சிறிய வீடியோ கிளிப் இணையதளங்களில் காட்டுத்தீயாகப் பரவி வருகிறது. பெய்ஜிங்கில் நடைபெற்ற அரசு விருந்தின் போது, சீன அதிபர் ஷி ஜின்பிங் தனது இருக்கையிலிருந்து எழுந்து மேடைக்குச் சென்றபோது, அருகில் அமர்ந்திருந்த ட்ரம்ப் அங்கிருந்த ஒரு கருப்பு நிறக் கோப்பைத் திறந்து பார்ப்பது போன்ற காட்சிகள் அந்த வீடியோவில் உள்ளன. இதைப் பார்த்த நெட்டிசன்கள், “பள்ளி மாணவர்கள் அடுத்தவர் நோட்டைப் பார்த்து காப்பி அடிப்பது போல ட்ரம்ப் செய்கிறார்” என்று கேலி செய்ததோடு, இது மிகப்பெரிய இராஜதந்திர அநாகரிகம் என்றும் விமர்சித்தனர்.
இருப்பினும், இந்த விவகாரம் குறித்து நடத்தப்பட்ட உண்மை கண்டறியும் சோதனையில் (Fact Check) பல அதிரடித் தகவல்கள் கிடைத்துள்ளன. வெள்ளை மாளிகை மற்றும் அசோசியேட்டட் பிரஸ் (AP) வெளியிட்ட முழுமையான வீடியோ காட்சிகளை ஆய்வு செய்தபோது, ட்ரம்ப் திறந்து பார்த்த அந்த கோப்பு ஷி ஜின்பிங்கினுடையது அல்ல, அது ட்ரம்ப்பின் சொந்தக் கோப்பு என்பது உறுதியாகியுள்ளது. அந்த கோப்பின் முகப்பில் அமெரிக்க அதிபரின் அதிகாரப்பூர்வ முத்திரையான ‘சீல் ஆஃப் தி பிரசிடென்ட்’ (Seal of the President of the United States) தெளிவாகப் பதிவாகியுள்ளது.
விருந்தின் தொடக்கத்தில் ஷி ஜின்பிங் தனது உரையை நிகழ்த்த மேடைக்குச் சென்றபோது, ட்ரம்ப் தனது உரையைத் தயார் செய்வதற்காகத் தனக்கு இடதுபுறம் வைக்கப்பட்டிருந்த தனது சொந்தக் கோப்பையே எடுத்துச் சரிபார்த்துள்ளார். பின்னர் அவரும் அந்த கோப்பைத் தூக்கிக் கொண்டு மேடைக்குச் சென்று தனது உரையை வாசிப்பதைக் காண முடிகிறது. கேமரா கோணங்கள் மற்றும் வீடியோ எடிட்டிங் காரணமாக, ட்ரம்ப் அடுத்தவர் டைரியை எட்டிப் பார்ப்பது போன்ற ஒரு மாயத் தோற்றம் இணையதளங்களில் உருவாக்கப்பட்டது விசாரணையில் அம்பலமாகியுள்ளது.
சர்வதேச அளவில் அமெரிக்கா மற்றும் சீனா இடையே பொருளாதாரப் போட்டி மற்றும் போர் பதற்றங்கள் நிலவி வரும் சூழலில், இத்தகைய தவறான தகவல்கள் சமூக வலைதளங்களில் மிக வேகமாகப் பரப்பப்படுகின்றன. குறிப்பாக ‘மஸ்கோ நியூஸ்’ போன்ற சில எக்ஸ் (X) கணக்குகள் இந்தத் தவறான வீடியோவைப் பகிர்ந்து தேவையற்ற சர்ச்சையைக் கிளப்பியுள்ளன. ட்ரம்ப் சீன மொழி தெரியாமலேயே அதனைப் புரிந்து கொள்ள முயன்றார் என்று கிண்டல் செய்தவர்களுக்கு, அது அவரது சொந்த ஆங்கிலக் கோப்பு என்ற உண்மை தற்போது பதிலடியாக அமைந்துள்ளது.