Posted in

ட்ரம்ப்பின் ‘தங்க’ போன் விற்பனை தொடக்கம்! Made in USA முத்திரையில் நீடிக்கும் மர்மம்; டெக் உலகில் புதிய விவாதம்!

டொனால்ட் ட்ரம்ப் மற்றும் அவரது மகன்களான டொனால்ட் ட்ரம்ப் ஜூனியர் மற்றும் எரிக் ட்ரம்ப் ஆகியோரால் கடந்த 2025-ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்ட ‘ட்ரம்ப் மொபைல் T1’ (Trump Mobile T1) ஸ்மார்ட்போன்கள், தற்போது வாடிக்கையாளர்களுக்கு ஷிப்பிங் செய்யப்படுவதாக அந்நிறுவனத்தின் சிஇஓ பேட் ஓ பிரையன் உறுதிப்படுத்தியுள்ளார். சுமார் $499 (சுமார் ₹41,000) விலையில் அறிமுகம் செய்யப்பட்ட இந்த ஆண்ட்ராய்டு போனை வாங்குவதற்கு, சுமார் 6 லட்சம் பேர் முன்பணம் செலுத்தி காத்திருந்தனர். கடந்த 2025 ஆகஸ்ட் மாதமே வெளியாகும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், சுமார் 5 முறை காலக்கெடு மாற்றப்பட்டு தற்போது ஒரு வழியாக சந்தைக்கு வந்துள்ளது.

இந்த ஸ்மார்ட்போனின் முக்கியச் சிறப்பாகக் கருதப்படுவது அதன் ‘மேட் இன் யுஎஸ்ஏ’ (Made in USA) முத்திரைதான். ஆனால், இது முழுமையாக அமெரிக்காவிலேயே தயாரிக்கப்பட்டதா என்பதில் இன்னும் மர்மம் நீடிக்கிறது. ஆரம்பத்தில் ‘அமெரிக்காவிலேயே தயாரிக்கப்பட்டது’ என்று விளம்பரப்படுத்தப்பட்ட நிலையில், தற்போது ‘அமெரிக்க மதிப்புகளுடன் வடிவமைக்கப்பட்டது’ (Designed with American values) என்று விளம்பர வாசகங்கள் மாற்றப்பட்டுள்ளன. சில தொழில்நுட்ப வல்லுநர்கள், இந்த போன் சீன நிறுவனமான ‘விங்டெக்’ (Wingtech) தயாரிக்கும் போன்களைப் போலவே இருப்பதாகச் சந்தேகம் எழுப்பியுள்ளனர். தற்போது மியாமி நகரில் இறுதி அசெம்பிளி மட்டும் செய்யப்படுவதாகக் கூறப்படுகிறது.

தொழில்நுட்ப ரீதியாக இந்த T1 போன் 6.78 இன்ச் அமோலெட் (AMOLED) திரை, ஸ்னாப்டிராகன் 7 சீரிஸ் பிராசசர் மற்றும் 5,000 mAh பேட்டரி வசதிகளைக் கொண்டுள்ளது. குறிப்பாக இதன் பின்புறம் தங்க நிறத்திலும், அமெரிக்கக் கொடி மற்றும் ட்ரம்ப் மொபைல் முத்திரையுடனும் காட்சியளிக்கிறது. மேலும், இன்றைய நவீன போன்களில் இல்லாத 3.5 மிமீ ஹெட்ஃபோன் ஜாக் (Headphone Jack) வசதி இதில் இருப்பது கூடுதல் சிறப்பு. பாதுகாப்பு மற்றும் பிரைவசிக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் இந்த போன் வடிவமைக்கப்பட்டுள்ளதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.

இருப்பினும், இந்த போன் விநியோகத்தில் ஏற்பட்ட தாமதங்கள் மற்றும் அதன் தயாரிப்பு குறித்த முன்னுக்குப் பின் முரணான தகவல்கள் காரணமாக அமெரிக்க வர்த்தக ஆணையம் (FTC) இது குறித்து விசாரணை நடத்த வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. டொனால்ட் ட்ரம்ப் அதிபராக இருக்கும் போதே அவரது பெயரில் இத்தகைய வணிகம் நடைபெறுவது அதிகார துஷ்பிரயோகம் என எதிர்கட்சியான ஜனநாயகக் கட்சியினர் விமர்சித்து வருகின்றனர். எது எப்படியோ, நீண்ட காலக் காத்திருப்பிற்குப் பிறகு தங்களது ‘தங்க போன்’ கைக்கு வருவதால் ட்ரம்ப் ஆதரவாளர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.