ஐரோப்பிய நாடான பெல்ஜியத்தின் வடக்கு பிளாண்டர்ஸ் பிராந்தியத்தில் உள்ள புக்கன்ஹவுட் (Buggenhout) நகரில் இன்று காலை ஒரு கோர ரயில் விபத்து நிகழ்ந்துள்ளது. கற்றல் குறைபாடுடைய மாற்றுத்திறனாளி குழந்தைகள் பயிலும் சிறப்புப் பள்ளிக்கு (Special Needs School) மாணவர்களை ஏற்றிச் சென்ற சிறிய ரக மினி பேருந்து ஒன்று, அங்குள்ள ரயில்வே கேட்டை கடக்க முயன்றபோது அதிவேகமாக வந்த பயணிகள் ரயில் அதன் மீது பயங்கரமாக மோதியது. இந்த மிகக் கொடூரமான விபத்தில் இரண்டு பள்ளிக் குழந்தைகள் உட்பட மொத்தம் 4 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
இன்று காலை சரியாக 8:00 மணியளவில் புக்கன்ஹவுட் ரயில் நிலையம் அருகே உள்ள வீர்ஹுய்சென் (Vierhuizen) என்ற ரயில்வே கடவையில் இந்த விபத்து நேரிட்டுள்ளது . புரூக்ஸ் நகரில் இருந்து வந்த பயணிகள் ரயில், மணிக்கு சுமார் 120 கிலோமீட்டர் வேகத்தில் வந்துகொண்டிருந்த போது இந்த மோதல் நிகழ்ந்துள்ளது . ரயிலின் எஞ்சின் மோதிய வேகத்தில் அந்த மினி பேருந்து அப்படியே தூக்கி வீசப்பட்டு, சுமார் 15 மீட்டர் தூரத்தில் இருந்த ஒரு இரும்பு மின்கம்பத்தின் மீது மோதி அப்பளம்போல் நொறுங்கி தலைகீழாகக் கவிழ்ந்தது. இந்த அதிர்ச்சிகரமான விபத்தில் பேருந்தின் 49 வயது ஓட்டுநர், 27 வயது பெண் காப்பாளர் (Supervisor) மற்றும் 15, 12 வயதுடைய இரண்டு சிறுவர்கள் என நான்கு பேர் பலியாகினர்.
விபத்து நடந்த சமயத்தில் அந்தப் பேருந்தில் மொத்தம் 7 குழந்தைகள், ஒரு காப்பாளர் மற்றும் ஓட்டுநர் என 9 பேர் இருந்துள்ளனர் . விபத்தில் படுகாயமடைந்த மற்ற 5 குழந்தைகளும் உடனடியாக மீட்கப்பட்டு அருகில் உள்ள உள்ளூர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டு அவசரப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தற்போதைக்கு அவர்களின் உடல்நிலை சீராக இருப்பதாகவும், உயிருக்கு எந்த ஆபத்தும் இல்லை என்றும் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில், ரயிலில் பயணம் செய்த சுமார் 100 பயணிகளில் யாருக்கும் எவ்வித காயமும் ஏற்படவில்லை என்றும், அதிர்ச்சியடைந்த அவர்கள் பத்திரமாக மீட்கப்பட்டு அருகில் உள்ள தீயணைப்பு நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர் என்றும் தேசிய ரயில்வே நிறுவனம் (SNCB) தெரிவித்துள்ளது.
ரயில்வே உள்கட்டமைப்பு நிறுவனமான இன்ஃப்ராபெல் (Infrabel) வெளியிட்டுள்ள முதற்கட்ட அறிக்கையில், விபத்து நடந்த நேரத்தில் ரயில்வே கேட்டின் தடுப்புகள் (Barriers) மூடப்பட்டிருந்ததாகவும், சிவப்பு எச்சரிக்கை விளக்குகள் எரிந்து கொண்டிருந்ததாகவும் கண்காணிப்பு கேமரா காட்சிகள் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது. சமிஞ்கைகளை மீறி பேருந்து தண்டவாளத்தை கடக்க முயன்றதைக் கண்டு ரயில் ஓட்டுநர் அவசரக்கால பிரேக்குகளைப் பயன்படுத்தியும் ரயிலின் வேகத்தால் விபத்தைத் தடுக்க முடியாமல் போனதாகக் கூறப்படுகிறது. இந்த மனிதாபிமானமற்ற சோகத்திற்கு பெல்ஜியப் பிரதமர் பார்ட் டி வெவர் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத் தலைவர் உர்சுலா வான் டெர் லேயன் ஆகியோர் தங்களது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளனர்.