இஸ்ரேல் மற்றும் லெபனான் இடையே நீண்ட போராட்டத்திற்குப் பிறகு கடந்த வெள்ளிக்கிழமை தற்காலிக போர் நிறுத்தம் அமலுக்கு வந்தது. இந்த அமைதிச் சூழல் நிலவும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், சனிக்கிழமை அதிகாலை தெற்கு லெபனானில் ஐநா அமைதிப்படை (UNIFIL) மீது நடத்தப்பட்ட திடீர் துப்பாக்கிச் சூட்டில் பிரெஞ்சு வீரர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். தனிமைப்படுத்தப்பட்டிருந்த ஐநா சோதனைச் சாவடி ஒன்றுக்குச் செல்லும் வழியைச் சீரமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த ரோந்துப் படையினர் மீது, ஆயுதமேந்திய கும்பல் ஒன்று சிறிய ரகத் துப்பாக்கிகளால் சரமாரியாகத் தாக்குதல் நடத்தியுள்ளது. இதில் குண்டு பாய்ந்த அந்த வீரரை மீட்டுக் காப்பாற்ற எடுத்த முயற்சிகள் தோல்வியடைந்த நிலையில், அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்தத் தாக்குதலில் மேலும் மூன்று பிரெஞ்சு வீரர்கள் படுகாயமடைந்துள்ள நிலையில், இதற்கு ஹிஸ்புல்லா அமைப்பே காரணம் என பிரெஞ்சு அதிபர் இம்மானுவேல் மேக்ரான் பகிரங்கமாகக் குற்றம் சாட்டியுள்ளார். இது குறித்துத் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், “இந்தத் தாக்குதலுக்குப் பின்னால் ஹிஸ்புல்லா இருப்பது அனைத்து ஆதாரங்கள் மூலமும் உறுதியாகிறது” என்று தெரிவித்துள்ளார். போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்ட சில மணி நேரங்களிலேயே அமைதிப்படையைக் குறிவைத்து நடத்தப்பட்ட இந்தத் தாக்குதல், மத்திய கிழக்கில் மீண்டும் பதற்றத்தை அதிகரித்துள்ளது.
தாக்குதலில் ஈடுபட்ட குற்றவாளிகளை லெபனான் அதிகாரிகள் உடனடியாகக் கைது செய்ய வேண்டும் என மேக்ரான் வலியுறுத்தியுள்ளார். ஐநா அமைதிப்படையுடன் இணைந்து லெபனான் அரசு தனது பொறுப்பைச் சரியாக நிறைவேற்ற வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார். ஹிஸ்புல்லா மற்றும் இஸ்ரேலியப் படைகளுக்கு இடையே கடந்த சில நாட்களாகக் கடும் மோதல் நடைபெற்ற பகுதியில், பாதிக்கப்பட்ட இடங்களைச் சீர்செய்யச் சென்றபோது இந்தத் துயரம் நிகழ்ந்துள்ளதாக பிரெஞ்சு பாதுகாப்புத்துறை அமைச்சர் கேத்தரின் வோட்ரின் தெரிவித்துள்ளார்.
இந்தச் சம்பவம் சர்வதேச அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே போரினால் சிதைந்துள்ள லெபனானில், அமைதியைக் கொண்டு வர முயலும் ஐநா படைகள் மீதே இத்தகைய தாக்குதல் நடத்தப்படுவது உலக நாடுகளின் கண்டனத்தைப் பெற்றுள்ளது. லெபனானில் நிலைகொண்டுள்ள சுமார் 10,000 ஐநா அமைதிப்படை வீரர்களில் பிரான்ஸ் முக்கியப் பங்கு வகிக்கும் நிலையில், இந்த மரணம் போர் நிறுத்த ஒப்பந்தத்தின் நம்பகத்தன்மை குறித்த பெரும் கேள்விகளை எழுப்பியுள்ளது.