ஜெர்மனி நாடு ரஷ்யாவுடன் நேரடியாக ஆயுதம் ஏந்திய ராணுவ மோதலில் ஈடுபடும் அபாயம் உள்ளதாக ஜெர்மனியின் கூட்டாட்சி உளவு அமைப்பான BND-ன் தலைவர் மார்ட்டின் ஜெய்கர் (Martin Jäger) எச்சரிக்கை விடுத்துள்ளார். திங்கள்கிழமை அன்று ஜெர்மன் நாடாளுமன்றத்தில் உளவுத்துறை தலைவர்களின் வருடாந்திர பகிரங்க விசாரணையின் போது பேசிய அவர், ரஷ்யாவுடனான மோதல் புதிய மற்றும் ஆபத்தான பரிமாணத்தை எட்டியுள்ளது
ஜெர்மன் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மத்தியில் பேசிய மார்ட்டின் ஜெய்கர், ஐரோப்பிய ஜனநாயக நாடுகளுக்கு எதிராக ரஷ்யா தனது “நிழல் போரை” (Shadow War) தீவிரப்படுத்தி வருவதாகவும், சதிவேலைகள் உள்ளிட்ட விரோத நடவடிக்கைகளை அதிகரிக்க ரஷ்யா தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார். ஜெர்மனியில் உள்ள முக்கிய இலக்குகள் மீது தாக்குதல்கள் நடத்தப்படும் ஆபத்து உண்மையாகவும் தற்போதைய அச்சுறுத்தலாகவும் நீடிக்கிறது என்று அவர் சுட்டிக்காட்டினார். அண்மையில் லீப்சிக் (Leipzig) விமான நிலையத்தில் நடத்தப்பட்ட தாக்குதல் முயற்சியை இதற்கான முக்கிய உதாரணமாக அவர் எடுத்துக் காட்டினார்.
ஜெர்மனியுடன் வேறு எந்த நாடும் இந்த அளவுக்கு நேரடி மற்றும் விரிவான அச்சுறுத்தலை ஏற்படுத்தவில்லை என்று சுட்டிக்காட்டிய மார்ட்டின் ஜெய்கர், “நாங்கள் இந்த மோதலை விரும்பவில்லை; ஆனால் உக்ரைனுக்கு எதிரான ரஷ்யாவின் ஆக்கிரமிப்புப் போரையும், நில விரிவாக்கக் கொள்கையையும் நாங்கள் ஏற்றுக்கொள்ளாததால் ரஷ்யா எங்களை முதன்மை எதிரியாகப் பார்க்கிறது” என்று கூறினார். அதே கூட்டத்தில் பேசிய ஜெர்மனியின் உள்நாட்டு உளவுத்துறை தலைவரும், மேற்கத்திய நாடுகளுக்கு எதிரான பிரசாரத்தின் ஒரு பகுதியாகச் சதிவேலைகள் மற்றும் இடையூறுகளைச் செய்ய ரஷ்யா தயாராகி வருவதாக எச்சரித்தார்.
ரஷ்யாவின் இந்தத் தீவிர உளவு மற்றும் சதிவேலைகளுக்கு எதிராக ஜெர்மனிய பாதுகாப்புச் சேவைகளுக்கு கூடுதல் அதிகாரங்களும் தேவையான நிதியாதாரங்களும் வழங்கப்பட வேண்டும் என உளவுத்துறை அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர். ஐரோப்பிய நாடுகளுக்கு எதிரான ரஷ்யாவின் இந்த மறைமுக நடவடிக்கைகள் தீவிரமடைந்து வரும் நிலையில், நேட்டோ (NATO) அமைப்பில் உள்ள உறுப்பு நாடுகளும் தங்களது எல்லைப் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு நடவடிக்கைகளை மேலும் தீவிரப்படுத்தத் தொடங்கியுள்ளன.