Posted in

லிங்கமலையில் சிலுவை விவகாரம்: தவெக அரசைக் கண்டித்து பாஜக தலைவர்கள் அறிக்கை!

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அருகே மலம்பட்டி ஊராட்சியில் 1,000 ஆண்டுகள் பழமையானதாகக் கருதப்படும் லிங்கமலையில் சிவன் மற்றும் பெருமாள் கோயில்கள் அமைந்துள்ளன. அப்பகுதியில் உள்ள சிலர் சிலுவையை நட்டு வழிபாடுகளில் ஈடுபட்டு வந்ததாகக் கூறப்படும் நிலையில், இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதலை அடுத்து 19 பேர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஏற்கனவே இலுப்பூர் வருவாய் கோட்டாட்சியர் அந்த இடத்தை அகற்ற உத்தரவிட்டிருந்த நிலையிலும் பிரச்சனைகள் தொடர்வதாக அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

இச்சம்பவம் குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள பாஜக ஒருங்கிணைப்புக் குழு உறுப்பினர் எச். ராஜா, இந்துக்களின் அடையாளங்களை அழிக்கும் நடவடிக்கைகளைத் தவெக அரசு கண்டிக்காமல் மௌனம் காப்பதாக விமர்சித்துள்ளார். இதேபோல பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், கோட்டாட்சியரின் தடையையும் மீறி நிகழ்வுகள் நடத்தத் திட்டமிடப்படுவதாகக் சுட்டிக்காட்டி தவெக அரசு அனைவருக்குமான ஆட்சியைச் செயல்பட்டு காட்ட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

இச்சம்பவத்தைக் கண்டித்து அப்பகுதி இந்து அமைப்புகளும் கிராம மக்களும் சாலை மறியல் உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபட்டதால் அங்குப் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

அப்பகுதியில் மத மோதல்கள் ஏற்படாத வண்ணம் அமைதியைப் பராமரிக்க வருவாய்த்துறையினரும் காவல்துறையினரும் கூடுதல் கவனம் செலுத்தித் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.